தேடுதல்

நம்பிக்கையில் நிலைத்திருக்க வயதுமுதிர்ந்தோர் கற்றுத்தருகின்றனர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதுமுதிர்ந்தோர் பற்றி ஆற்றிவருகின்ற புதன் பொது மறைக்கல்வியுரைகளில், இப்புதனன்று 10வது பகுதியாக, விவிலிய மனிதர் யோபு பற்றி எடுத்துரைத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 15, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், இந்தியத் திருஅவையின் முதல் இல்லற மறைசாட்சியாக விளங்கும் தேவசகாயம் அவர்கள் உள்ளிட்ட, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்து அருளாளர்களைப் புனிதர்களாக அறிவித்தார். இந்த பத்து புதிய புனிதர்களின் படங்கள் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பில் இன்னும் அழகுறக் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன. வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், மே 18,  இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய புதன் பொது மறைக்கல்வியுரை நிகழ்வில், இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான திருப்பயணிகள் பங்குபெற்றனர். இதில் பங்குபெற்ற நம் தமிழக ஆயர்கள் சிலர், இந்நிகழ்வின் இறுதியில் திருத்தந்தைக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி ஆசிர்பெற்றனர். இப்புதன் பொது மறைக்கல்வியுரையில், விவிலிய மனிதர் யோபு பற்றி எடுத்துரைத்தார், திருத்தந்தை. இந்நிகழ்வில், யோபு நூல் 42ம் பிரிவில் யோபுவின் இறுதி உறுதிமொழி என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ள பகுதி, பல்வேறு மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டது.

அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்: நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்;  அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது. ‘அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?” என்று கேட்டீர்; உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்;  அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்; வினவுவேன் உம்மை; விளங்க வைப்பீர் எனக்கு. உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்; ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால், என்னையே நொந்து கொள்ளுகின்றேன்;  புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்… யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன…அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்தார். (யோபு 42,1-6.12.16). 

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். இப்போது நாம் வாசிக்க கேட்ட விவிலியப் பகுதி, உலகளாவிய ஞான இலக்கியமான, யோபு நூலின் இறுதி இயலாகும். இறைவார்த்தையின் ஒளியில், முதுமையின் அர்த்தம் மற்றும், மதிப்புபற்றிய புதன் மறைக்கல்வியுரையில், யோபு என்ற மிகப்பெரிய விவிலிய மனிதர் பற்றி இன்று சிந்திக்கிறோம். யோபுவின் உறுதியான கடவுள் நம்பிக்கை, மற்றும், பெருமளவில் அவர் எதிர்கொண்ட துன்பங்கள், பல நேரங்களில் தீமையின்முன் மௌனமாக இருப்பதாகத் தெரிந்த கடவுள், தம் மீட்பளிக்கும் இரக்கம், மற்றும், அன்போடு புதிரான முறையில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இட்டுச் சென்றன. யோபு, பெருந்துன்பங்களை எதிர்கொண்டபோது, தீமை பற்றி அவரது நண்பர்களால், கொடுக்கப்பட்ட எளிமையான விளக்கங்களைப் புறக்கணித்தார். யோபு தனது கடுந்துன்பங்கள் அனைத்தையும் கடவுள்முன் வைத்தார், மற்றும், அவரிடம் போராடினார். அதேநேரம், கடவுளின் நீதியின் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை தக்க காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். அநீதியானது, மற்றும், தாங்கமுடியாதது போலத் தோன்றுகின்ற துன்பங்களைத் தாங்கிக்கொள்கின்ற நல்ல மனிதர்கள், யோபு போன்று தங்களின் நம்பிக்கையை கடவுளின் வாக்குறுதிகளில் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கும் சூழல்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இதில், வயதுமுதிர்ந்தோர், நம்பிக்கை மற்றும், நீண்டகால வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றிலிருந்து பிறக்கும் கண்ணோட்டத்தோடு, சான்று வாழ்வை வழங்கமுடியும்.  நம்பிக்கை நிறைந்த செப வாழ்வில் முன்மாதிரிகையாய் இருப்பதன் வழியாக, அவர்கள், சிலுவையில் அறையுண்ட இயேசுவோடு நம்மை ஒன்றிணைக்க கற்றுக்கொடுக்க இயலும். இயேசு, சிலுவையில் தம்மையே முழுமையாக இறைத்தந்தையின் கரங்களில் அர்ப்பணித்தார், இறைத்தந்தையின் எல்லையில்லா அன்பு, மரணத்தை வாழ்வாகவும், மிகப்பெரும் தீமையை, அளவில்லா நன்மையாகவும் மாற்றுகின்றது.  

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யோபு பற்றிய தன் இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார். இறுதியில், இம்மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும் நம் இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பு பொழியப்படச் செபித்தார். ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக என்று வாழ்த்தி, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மே 2022, 14:30