திருத்தந்தை: ஆசிரியராக இருப்பது, அப்பணியில் வாழ்வதாகும்
மேரி தெரேசா: வத்திக்கான்
வாழ்வில் அனைத்தும் நம்மைக் கைவிட்டாலும், நம் தந்தையாக இருக்கின்ற நிலையிலிருந்து கடவுள் ஒருபோதும் தவறுவதில்லை, அவரது கருணை, எப்போதும், இருக்கும், இந்த ஓர் உண்மையை, இருளான நேரங்களிலும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய திருப்பயணிகள் குழு ஒன்றிடம் கூறினார்.
புனித லூசியா ஃபிலிப்பினி பிறந்ததன் 350ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அப்புனிதர் நிறுவிய பக்த பிலிப்பினி போதகர் அருள்சகோதரிகள் சபையினர், வித்தெர்போ, சிவித்தாவெக்கியா-தார்குயிர்னியா மறைமாவட்டத்தின் திருப்பயணிகள் என, ஏறத்தாழ நான்காயிரம் பேரை, மே 14, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
இப்புனிதரின் 350ம் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் இந்த யூபிலி ஆண்டு, வருங்காலத்திற்குப் புதிய சக்தியைப் பெறுவதற்கு உதவுகின்ற ஓர் ஊற்றுக்குத் திரும்புவதாக உள்ளது, அதேநேரம், இப்புனிதர் பலருக்குத் தாராளமாக விநியோகித்த அரும்கொடைகளின் வாய்க்கால்களாக இருப்பதற்கு அவரது பரிந்துரையை இறைஞ்சுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்று திருத்தந்தை கூறினார்.
பக்த பிலிப்பினி போதகர் சபை
இந்நேரத்தில் பக்த பிலிப்பினி போதகர் சபை அருள்சகோதரிகளுக்கும், திருப்பயணிகளுக்கும் தனித்தனியாக இரு கருத்துக்களை எடுத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினரின் பெயரே, அவர்களின் போதகப் பணியை வலியுறுத்துகின்றது என்றும், கற்றுக்கொடுப்பவரே ஆசிரியர் என்றும், நம் உள்ளத்தில் எதை வைத்திருக்கின்றோமோ அதையே நாம் மற்றவருக்கு வழங்குகிறோம் என்றும் கூறினார்.
ஆசிரியராக இருப்பது என்பது, ஒரு பணியை வாழ்வதாகும் எனவும், வெளியில் சிறப்பாக உரையாற்றிவிட்டு, வாழ்க்கை மற்றொரு திசையில் சென்றால், நம் பங்கை நடிக்கின்ற வெறும் நடிகர்களாக மட்டுமே நாம் இருப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை, இந்த ஆசிரியப் பணியில் வாழ்வதற்கு, அவர்களின் சபையை ஆரம்பித்த புனித லூசியா உதவமுடியும் என்றும் கூறினார்.
இயேசுவைப் பற்றிப் போதிப்பதில் மட்டும் திருப்தி அடையாமல், முதலில் இயேசுவுக்குச் சாட்சிகளாய் வாழவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இறையழைத்தல்கள் குறைவு உட்பட துறவு வாழ்வில் எதிர்கொள்ளப்படும் இன்னல்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம், பணிசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வாழ்வதே அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய வழி என்பதை வலியுறுத்திக் கூறினார்.
புனித லூசியா பிலிப்பினியைக் கொண்டாடும்...
புனித லூசியா பிலிப்பினியைக் கொண்டாடும் திருப்பயணிகளாகிய நீங்கள், எப்போதும் கடவுளில் ஆழமான நம்பிக்கை வைத்திருந்த அப்புனிதரின் வாழ்வைப் பின்பற்றுங்கள் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார். நம் வாழ்வில், மக்களும் பொருள்களும் நம்மைவிட்டு நீங்கிவிடலாம், ஆனால் இறைத்தந்தையாம் கடவுளின் கருணை ஒருபோதும் நம்மைவிட்டு அகலாது என்றுரைத்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்