வத்திக்கானின்  சாந்தா மார்த்தா இல்லம் வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லம்  

வத்திக்கானின் 4 தங்கும் இல்லங்கள் புதிய அமைப்பின்கீழ்

Domus Sanctae Marthae, Domus Romana Sacerdotalis, Domus, Domus Internationalis Paulus VI, Casa San Benedetto ஆகிய நான்கையும் Domus Vaticanae என்ற புதிய ஓர் அமைப்பின்கீழ் திருத்தந்தை அமைத்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் உள்ளிட்ட, வத்திக்கானைச் சார்ந்த நான்கு தங்கும் இல்லங்களை ஒன்றிணைக்கும் ஒரு புதிய அமைப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 05, இவ்வியாழனன்று உருவாக்கியுள்ளார்

இந்த இல்லங்களின் சொத்துக்களை, APSA என்ற திருஅவையின் சொத்துக்களைப் பராமரிக்கும் திருப்பீட அமைப்பின்கீழ் வருகின்ற ஆணை அறிக்கையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

1996ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் Domus Sanctae Marthae இல்லத்தை உருவாக்கினார், இந்த இல்லம், ஏற்கனவே செயல்படும் Pontificium Hospitium Sanctae Marthae இல்லத்தின் தொடர்ச்சியாக உள்ளது என்று, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இதே திருத்தந்தை, 1999ம் ஆண்டு சனவரி 6ம் தேதி, "Traspontina" சாலையிலுள்ள Domus Romana Sacerdotalis அருள்பணியாளர் இல்லத்தையும், பன்னாட்டு அருள்பணியாளர்கள் தங்குவதற்கென்று Domus Internationalis Paulus VI இல்லத்தையும் உருவாக்கினார் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மூன்று இல்லங்களும், திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்கள், ஆயர்கள் உரோம் நகருக்கு வருகின்ற திருப்பீடத் தூதரகப் பணியாளர்கள், திருத்தந்தையை அல்லது திருப்பீட அதிகாரிகளைச் சந்திக்க வருகின்ற அருள்பணியாளர்கள் போன்ற அனைவரையும் அருள்பணியாளர்கள் மீதுள்ள உடன்பிறப்பு உணர்வில் வரவேற்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பீடத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கென்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2008ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி Casa San Benedetto இல்லத்தை உருவாக்கினார் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது, திருப்பீடத்தோடு தொடர்புடைய Domus Vaticanae என்ற புதியதோர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இது வத்திக்கான் நாட்டிற்குள் அமைந்திருக்கும் என்று அறிவித்துள்ளார்.

Domus Sanctae Marthae, Domus Romana Sacerdotalis, Domus, Domus Internationalis Paulus VI, Casa San Benedetto ஆகிய நான்கையும், Domus Vaticanae என்ற புதிய ஓர் அமைப்பின்கீழ் அமைத்துள்ளார் மற்றும், அவை, APSAவின்கீழ் வருகின்றன என்று, திருத்தந்தை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஆணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2022, 16:26