திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் போர் எதிர்ப்பு புகைப்படம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் நேபாம் தாக்குதலில் இருந்து தப்பி ஓடும்போது புகைப்படம் எடுக்கப்பட்ட கிம் ஃபூக் பான் தி என்ற பெண்ணை, மே 11 இப்புதனன்று, தனது புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிம்முடன் போர் எதிர்ப்பு சின்னமான இந்தப் புகைப்படத்திற்காகப் புலிட்சர் விருதை வென்ற புகைப்படக் கலைஞரான நிக் உட் என்பவரும் உடன் சென்றார்.
இப்போது 59 வயது நிரம்பிய கிம், அரை நூற்றாண்டுக்குப் பிறகு, உயிர் பிழைத்தவர் என்ற முறையில், தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் அமைதியை விரும்புகிறோம் என்றும், ஏனென்றால் உலகிற்கு அமைதி தேவை. அமைதிக்கான இந்த அர்ப்பணிப்புடன் தான் தாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து “The Napalm Girl" என்ற ஆவணப்படத்தில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.
நான் என் குழந்தைப் பருவத்தை இழந்தேன் என்பதை அந்தப் படம் எனக்கு நினைவூட்டுகிறது என்றும், முதலில் நான் அதை வெறுத்தாலும் காலப்போக்கில் அதன் மதிப்பை உணர்ந்தேன் என்றும், ஒரு குழந்தை நிர்வாணமாக விரக்தியில் அழும் அவமானத்தை அதில் கண்டேன் என்றும் கிம் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்தத் துயரமான நிலையில், தானும் உதவி பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், 14 மாதங்கள் மருத்துவமனையில் இருந்த தனக்கு கட்டணமின்றி 17 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன என்றும் தனது கடந்த கால வலியை நினைவுகூர்ந்துள்ளார் கிம்.
1972, ஜூன் 8ம் நாளன்று, வியட்நாமில், சைகோனுக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ட்ராங் பான் கிராமத்தில் நேபாம் குண்டுகள் பொழிந்தன. அந்நிலையில், இளம்பெண்ணான கிம்மின் விரக்தியை ஒரே ஷாட்டில் நிக் உட் படம் பிடித்தார். அப்போது கிம்மிற்கு ஒன்பது வயது மட்டுமே. நெருப்பிலிருந்து அவர் தப்பி ஓடியபோது அவளுடைய ஆடைகள் முற்றிலும் எரிந்துபோயின. அந்தப் புகைப்படம் 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்