சீனாவிலுள்ள ஆயர்கள், கத்தோலிக்கரோடு திருத்தந்தை ஒருமைப்பாடு
மேரி தெரேசா: வத்திக்கான்
மே 22, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவிலுள்ள கத்தோலிக்கரோடு திருஅவை ஒன்றித்திருக்குமாறு அழைப்புவிடுத்தார்.
சீனாவின் ஷங்காய் நகரில் ஷேஷன் திருத்தலத்தில் உயரிய பக்திவணக்கத்தோடு போற்றப்பட்டுவரும் சகாய அன்னை விழா மே 24, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படுகிறது, இந்த அன்னை மரியாவை, சீனாவின் கத்தோலிக்கர் தங்களின் பாதுகாவலராகப் போற்றி வருகின்றனர், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அம்மக்களோடு தனது ஆன்மீக நெருக்கத்தைத் தெரிவிப்பதாகத் திருத்தந்தை கூறினார். அம்மக்களும், ஆயர்களும், பல நேரங்களில் எதிர்கொள்கின்ற சிக்கலான சூழல்களை, தான் கவனமுடன் கேட்டுவருவதாகவும், அவர்களுக்காகத் தினமும் செபிப்பதாகவும் திருத்தந்தை உறுதி கூறியுள்ளார்.
Pauline Marie Jaricot
மேலும், இஞ்ஞாயிறு மாலையில், பிரான்ஸ் நாட்டு லியோன் நகரில், Pauline Marie Jaricot அவர்கள் அருளாளராக உயர்த்தப்படுவதைக் குறிப்பிட்டு, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரமாணிக்கமுள்ள பொதுநிலையாளரான இவர், மறைப்பணித்தளங்களுக்கு ஆதரவாக, நற்செய்தி அறிவிப்பு அமைப்பை உருவாக்கியவர் என்று கூறியுள்ளார்.
திருஅவையின் மறைப்பணியில் உலகளாவிய கண்ணோட்டத்தோடு காலத்தின் மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, மிகவும் துணிச்சலான பெண்ணாகச் செயல்பட்ட இவரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, உலகெங்கும் நற்செய்தியைப் பரப்பும் பணியில், செபம் மற்றும், பிறரன்போடு அனைவரும் பங்குகொள்ளுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
மே 22, இஞ்ஞாயிறன்று தொடங்கப்பட்டுள்ள Laudato Sì வாரம், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பராமரிப்பதில் நாம் ஒன்றிணைந்து செயல்படுமாறு நம்மை வலியுறுத்தும் பூமியின் அழுகுரலுக்கு மிகுந்த கவனத்துடன் செவிமடுக்க அழைப்புவிடுக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைக்கும் திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்