தேடுதல்

Cornelia de Lange தன்னார்வலர் அமைப்பின் உறுப்பினர்கள் Cornelia de Lange தன்னார்வலர் அமைப்பின் உறுப்பினர்கள் 

Cornelia de Lange நோயாளிகளோடு திருத்தந்தை ஒருமைப்பாடு

Cornelia de Lange Syndrome என்ற அரிதான நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்கிவரும் இத்தாலிய தன்னார்வலர் அமைப்பினருக்கு நன்றி – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

Cornelia de Lange தன்னார்வலர் அமைப்பின் உறுப்பினர்கள், சமுதாயத்தில் மிகவும் வலுவிழந்த சகோதரர் சகோதரிகளுக்கு அருகிலிருந்து ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 14, இச்சனிக்கிழமை முற்பகலில், Cornelia de Lange அமைப்பின் 150 உறுப்பினர்களை, வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, Cornelia de Lange என்ற அரிதான நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நீண்டகாலம் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இறுதியில் உரோம் நகருக்கு வந்துள்ள Vincenzo Placida அவர்களுக்கு, சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.

பிறப்பிலேயே பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோயால் அதிகமாகத் துன்புறுவோர், மற்றும், அவர்களின் குடும்பத்தினரோடு தன் ஒருமைப்பாட்டுணர்வு மற்றும், புரிந்துணர்வைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளைக் கண்டு சோர்ந்துபோகாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மனிதரை மையமாக வைத்து, உடன்பிறந்த உணர்வுகொண்ட சமுதாயத்தை அமைப்பதில், ஒருமைப்பாட்டுக் கலாச்சாரம் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது என்றும், இந்தப் பணியில் தன்னார்வத்தோடு ஈடுபடுவது, கடவுளன்பு, பிறரன்பு என்ற, கிறிஸ்தவத்தின் அடிப்படை பண்பில் ஈடுபடுவதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

நன்மைத்தனம், மற்றும், கனிவன்பின் சான்றுகளாகத் திகழுங்கள், உங்கள் பணியில் இன்னல்களை எதிர்கொள்ளும்போது ஒன்றிப்பு உணர்வில், அமைதி மற்றும், மனஉறுதியைக் காத்துக்கொள்ளுங்கள், உங்கள் பணியில் எப்போதும் அயலவருக்குச் சேவை என்பதே எப்போதும் இருக்கவேண்டும் என்று உரைத்து, அந்த அமைப்பினருக்கு தன் செபங்களையும் ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Cornelia de Lange syndrome என்பது, பிறவியிலே ஒருவரைப் பாதிக்கின்ற அரியவகை நோயாகும். இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் அறிவு குன்றியிருக்கும். கைகள், விரல்கள், தோள்பட்டைகள், எலும்புகள் போன்றவை வித்தியாசமாக இருக்கும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2022, 14:49