Cursillos கிறிஸ்தவ இத்தாலிய தேசிய இயக்கத்தினர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
அனைத்திற்கும் அடித்தளமான கிறிஸ்துவின் மீதுள்ள அன்பை உயிர்த்துடிப்புடன் காப்பது, கிறிஸ்தவ நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது ஆகிய இரண்டிலும் உடன்பிறந்த உணர்வோடும், நட்புணர்வோடும் வாழ்வது மாபெரும் அருள்வரமாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 28, இச்சனிக்கிழமையன்று, ஓர் இத்தாலிய இயக்கத்திடம் கூறியுள்ளார்.
Cursillos di Cristianità என்ற இத்தாலிய தேசிய கிறிஸ்தவ இயக்கத்தின் ஏறத்தாழ 2,400 பேரை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "கிறிஸ்தவ நம்பிக்கையில் இன்னும் ஒருபடி மேலே" என்பதை தனிவரமாகக் கொண்டு ஒவ்வொரு வாரமும் கூட்டங்கள் நடத்தும் இவ்வியக்கத்தினரைப் பாராட்டிப் பேசினார்.
இவ்வியக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, சந்திப்பு, நற்செய்தி அறிவிப்பு, சாட்சிய வாழ்வு, இறைவேண்டல் ஆகிய அம்சங்களில், மேலும் ஒரு படி முன்னோக்கிச் செல்வதற்கு, இவர்கள் ஒருவரையொருவர் தூண்டி வருகின்றனர் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்வியக்கத்தினரின் தனிவரத்திற்கு, அடிப்படையான இரு வழிகளைச் சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒன்றிப்பை நோக்கிச் செல்வது என்ற முதல் வழி, ஒருவர் தனது குழுவுக்கு அப்பாலும் குழுமத்தை அமைப்பது மற்றும், எப்போதும் ஒரே உடலாக, ஒருபோதும் தன் உறுப்பினர்களைப் பிரிக்காத திருஅவையில் வளர்வது பற்றிச் சொல்கின்றது என்றும், இதில் எவரும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மாநில மற்றும், தேசிய அளவில் மற்ற குழுக்களோடு இணைந்து ஒன்றிப்பை உருவாக்க இவ்வியக்கத்தினர் அழைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, Cursillos இயக்கத்தை குழுமமாக அமைப்பது பற்றிய இரண்டாவது வழி பற்றியும் எடுத்துரைத்தார்.
Cursillos இயக்கத்தை குழுமமாக அமைப்பதில், பிறரன்பு மற்றும், ஒன்றிப்பு உணர்வைக் காக்கவேண்டிய மிகப்பெரும் சவால் உள்ளது எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இயக்கத்தினர் நடத்துகின்ற கூட்டங்கள், செவிமடுத்தல் மற்றும், தெளிந்துதேர்தல் பண்புகளோடு திருஅவையில் இடம்பெறும் ஒன்றிணைந்து பயணம் என்ற நிகழ்வில் இடம்பெறும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்