தேடுதல்

மறைக்கல்வியுரை: மனஉறுதியோடு கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ்தல்

வாழ்வின் முதுமைப் பருவத்தில், வயதுமுதிர்ந்தோர் நம்பிக்கை வாழ்வுக்குச் சான்றுபகர்வதன் வழியாக, இளையோர் மனஉறுதி மற்றும், துணிச்சலோடு வாழ உதவ முடியும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்பு இதயங்களே, இத்தாலியில், குறிப்பாக, உரோம் பெருநகரில் சுற்றுலா, மற்றும், திருப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு நல்லதொரு காலநிலையும் ஒரு காரணமாகும். மே 04,  இப்புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு,  முதுமை பற்றிய எட்டாவது மறைக்கல்விப் பகுதியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கபேயர் 2வது நூல், 6ம் பிரிவில், எலயாசரின் மறைசாட்சி இறப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ள, வயதுமுதிர்ந்த எலயாசர் பற்றிய தன் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடைய வருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் உடனே அவர் தமது முடிவைத் தெரிவித்துத் தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார். அவர் தொடர்ந்து, “இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல; ஏனெனில் தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும். குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதுமாகும் (2 மக்க. 6,18.23-25)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். இறைவார்த்தையின் ஒளியில், முதுமையின் அர்த்தம் மற்றும், மதிப்புபற்றிய புதன் மறைக்கல்வியுரைப் பகுதியில், திருவிவிலியத்தில் மக்கபேயர் இரண்டாவது நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள எலயாசர் என்ற வயதுமுதிர்ந்தவர் பற்றி இன்று சிந்திப்போம். கி.மு.170ம் ஆண்டுவாக்கில் மனிதரின் ஆயுள்காலம் ஏறத்தாழ நாற்பது வயதாக இருந்தபோது, மன்னர் நான்காம் அந்தியோக்குசின் கட்டளைப்படி, 90 வயது நிரம்பிய எலயாசர் பன்றி இறைச்சியை உண்ணக் கட்டாயப்படுத்தப்பட்டார். இது யூதச் சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டிருந்தது. யூதர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை நிறைந்த அடக்குமுறைகளில், இவ்வாறு அம்மக்கள், சிலைகளுக்குப் படைக்கப்பட்ட பன்றி இறைச்சியை உண்பதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதனை மறுப்பவர்கள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டனர். சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்பட்டவரும் வயதில் முதிர்ந்தவருமான எலயாசர், சிலைகளுக்குப் படைக்கப்பட்ட பன்றி இறைச்சியை உண்பதுபோல், வீட்டிலிருந்து சமைத்துக்கொண்டுவரப்பட்ட மற்ற இறைச்சியை உண்பதாக நடித்தால், அவரது வாழ்வு காப்பாற்றப்படும் என்று அவரது நண்பர்கள் ஆலோசனை கூறினர். ஆனால் எலயாசரோ, தான் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மறுதலிப்பதைவிட இறப்பதற்குத் தயார் என்று கூறினார். எலயாசர், தன் உயிரை பறித்துவிடுவார்கள் என்ற நிலையிலும்கூட தனது இறைநம்பிக்கையின் உண்மை மற்றும் மாண்பிற்குச் சான்றாக விளங்குகிறார். இவ்வாறு அவர், இளையோருக்கு வல்லமைமிக்க முன்மாதிரிகையாய் உள்ளார். இறைநம்பிக்கை என்பது, வெற்று கருத்தியலோ, அல்லது சட்டவிதிமுறைகளால் பின்பற்றக்கூடியதோ அல்ல, மாறாக, ஒருவர் தன்னை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகும். இக்காலக்கட்டத்தில் கடவுள் நம்பிக்கை, காலத்திற்கு ஏற்றது அல்ல என்றும், அது பழைய பாணி என்றும் அதனைப்  புறக்கணிக்கின்ற வல்லமைமிக்க கலாச்சாரச் சக்திகளுக்கு மாற்றாக வயதுமுதிர்ந்தோர், தெளிவான மற்றும், ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில், வெளிப்படுத்தும் அவர்களின் கடவுள் நம்பிக்கைச் சான்றுவாழ்வு அமையும். குழும வழிபாடு மற்றும், பிறரன்புச் செயல்களில், மாண்புள்ள நம்பிக்கை வாழ்வு வெளிப்படுத்தப்படுவதன் வழியாக வயதுமுதிர்ந்தோர் சமுதாய இணக்கத்தை உறுதிப்படுத்த உதவ முடியும். அதோடு, அச்செயல்கள் வழியாக, வயதுமுதிர்ந்தோர், ஒருங்கமைவு மற்றும், ஏற்கத்தக்க பிரமாணிக்கம் ஆகியவற்றின் முன்மாதிரிகையாய் இளையோருக்கு எல்லாக் காலத்திலும் விளங்கமுடியும். வயதுமுதிர்ந்தோரே, கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ்ந்து காட்டுதல், பலவீனமல்ல, மாறாக அது நம் வலிமை. அன்புள்ள வயதுமுதிர்ந்த சகோதரர், சகோதரிகளே, நாம் எல்லாரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். இளையோர் நம்மை நோக்குகிறார்கள். நமது ஒத்திணங்கிய வாழ்வு, அவர்களுக்கு அழகான வாழ்வுப் பாதையைத் திறக்க முடியும். ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம். இவ்வாறு, வயதில் முதிர்ந்த எலயாசரின் உறுதியான கடவுள் நம்பிக்கையை எடுத்துரைத்து, இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அவர் இம்மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட பல்வேறு கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும், பல்சமய குழுக்கள் உட்பட அனைவரையும் வாழ்த்தினார். உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்வில், நம் இறைத்தந்தையின் அன்புநிறை இரக்கம் பொழியப்படச் செபித்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2022, 13:28

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >