தேடுதல்

ருமேனியன் பாப்பிறைக் கல்லூரியின் தலைவர்கள், மாணவர்கள் ருமேனியன் பாப்பிறைக் கல்லூரியின் தலைவர்கள், மாணவர்கள்  (Vatican Media)

இயேசுவின் வழியில் நற்கனிகள் தந்திடும் வேர்களாய் வாழுங்கள்

ஒரு போதகரின் இதயத்தைக் கொண்டதாக உங்களின் பணிகள், நற்கனிகள் கொடுத்திட வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உரோம் நகரில் அமைந்துள்ள “Pio Romeno” என்ற ருமேனியன் பாப்பிறைக் கல்லூரியின் 85ம் ஆண்டை முன்னிட்டு அதன் குழுமத்தினரை மே 19, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், அழைத்தலின் வேர்களை அறிந்துகொண்டு நிறைந்த பலன் அளிக்கும் வளமான நிலமாகத் திகழ்ந்திட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பேதுரு, பவுல் மற்றும் பல மறைசாட்சிகள் துயில்கொள்ளும் இவ்வுரோமை நகரில், படிப்பு மற்றும் தியானத்தின் வழியாக அவர்கள் தங்களின் வேர்களை ஒரு திறமையான வழியில் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அவ்வேர்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றி சிந்திக்க இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவரின் துன்பங்களையும், நம்பிக்கைகொண்ட சாட்சிய வாழ்வையும் கடவுளுக்கு வழங்குவது உண்மையிலேயே சிறந்ததொரு கொடை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்திக்காகத் தங்கள் உயிரைக் கொடுப்பவர்கள் இவ்வாறே சிந்தித்து, இயேசுவின் அன்பு வழியைப் பின்பற்றி அனைத்து மக்களின் நலன்களுக்காவும் தங்களைக் கையளிக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவதாக, வேர்களுக்குப் பிறகு, நம்பிக்கையின் நல்ல நிலம் பற்றி கூற விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, படிக்கும் காலத்தில், இந்த நல்ல நிலத்தை மறந்துவிடக் கூடாது என்றும், இது, கடவுளின் புனித மக்களாகிய உங்கள் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், பெற்றோரால் பயிரிடப்பட்டது என்றும், அக்கல்லூரியில் தங்கியுள்ள அருள்பணித்துவ வாழ்வுக்குத் தயாரித்துவரும் மாணவர்களிடம் கூறியுள்ளார்.

ஏழைகள், நோயாளிகள், துன்பப்படுபவர்கள், சிறியவர்கள், எளியவர்கள் ஆகியோருக்காக, இயேசு வாழ்ந்த இம்மண்ணில், இம்மாணவர்களும் பணிகளாற்றி நற்கனிகள் தந்திட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

“Pio Romeno” என்ற ருமேனியன் பாப்பிறைக் கல்லூரி, 1937ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2022, 16:09