பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் ஆணையத்தின் பணிகளுக்கு பாராட்டு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
தலத்திருஅவைகள், புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு, கடந்த எழுபது ஆண்டுகளாக உதவி வருகின்ற, பன்னாட்டு கத்தோலிக்க புலம்பெயர்ந்தோர் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறியுள்ளார்.
இந்த ஆணையம் தொடங்கியுள்ள ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் பங்குகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, மே 30, இத்திங்களன்று செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர், ஐரோப்பாவில் பெரிய அளவில் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியுள்ளது, இம்மக்கள் பணியில், சவால்களை எதிர்கொள்ளும் தலத்திருஅவைகளுக்கு இந்த ஆணையம் உதவி வருவதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், உலகின் மற்ற பகுதிகளிலும் அடைக்கலம் தேடுகின்ற இலட்சக்கணக்கான மக்களை நாம் மறக்க முடியாது என்றும், திருஅவை என்ற முறையில், நாம் அனைவருக்கும் பணியாற்றவும், அமைதி நிறைந்த வருங்காலத்தைக் கட்டியெழுப்ப கடுமையாய் உழைக்கவும் விரும்புகிறோம் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வருகின்ற ஆண்டுகளில் பணியாற்ற புதிய நிர்வாக குழுவைத் தெரிவுசெய்தல், புதிய விதிமுறைகளை உருவாக்குதல், மற்றும், செயல்திட்ட வழிகாட்டுதல்களை அமைத்தல் ஆகிய மூன்று முக்கிய காரியங்கள் இக்கூட்டத்தில் இடம்பெற இருக்கின்றன, இவற்றுக்கு தன் ஆலோசனைகளை வழங்க விரும்புவதாக திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஆயர் பேரவைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருக்கு ஆற்றும் மேய்ப்புப்பணிகளில் உதவிசெய்வதற்கென்று, 1951ம் ஆண்டில் வணக்கத்துக்குரிய திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இந்த ஆணையத்தைத் தொடங்கினார் எனவும், இதன் இயல்பும், செயல்பாடும் திருஅவையின் மற்ற ஆணையங்களிலிருந்து மாறுபட்டவை எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இக்காலத்தில் புலம்பெயர்ந்தோர் தொடர்புடைய சிக்கலான பல சவால்களுக்குப் பதிலளிக்கும் வழிகளைக் காண்பதற்கு, இந்த ஆணையம், உலகின் ஆயர் பேரவைகள் மற்றும், மறைமாவட்டங்களுக்கு வல்லுநர்களைக் கொடுத்து உதவுகின்றது எனவும், உலகளாவியப் புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளுக்குப் பதில் காணும் வழிகளை, தலத்திருஅவைகளோடு இணைந்து இவ்வாணையம் செயலாற்றுகிறது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்