தேடுதல்

உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதி அமைப்பு உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதி அமைப்பு  (Vatican Media)

உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதி அமைப்பினர் சந்திப்பு

ஒருமைப்பாட்டுணர்வு என்ற சொல்லுக்கு உயிரூட்டம் கொடுப்பதற்கு, ஒதுக்கப்பட்டோர், ஏழைகள், மற்றும், புலம்பெயர்ந்தோருடன் நெருக்கமாகவும், பரிவன்போடும் இருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு, பிறரன்பால் அல்ல, மாறாக, உடன்பிறந்த உணர்வுநிலையால் அணைத்துக்கொள்வதில் உங்கள் கைகளை அழுக்கடையச் செய்யுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில், ஓர் உலகளாவிய அமைப்பிடம் கேட்டுக்கொண்டார்.

மே 25, இப்புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், பொது மறைக்கல்வியுரையை ஆற்றுவதற்குச் செல்வதற்குமுன், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறையில், உலகளாவிய ஒருமைப்பாட்டு நிதி என்ற அமைப்பின் இருபது பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இவ்வமைப்பினர், தங்களின் திறமைகளை, புலம்பெயர்ந்தோர் மற்றும், மிகவும் வாய்ப்பிழந்தோரோடு பகிர்ந்துகொண்டு ஆற்றும் பணிகளைத் தொடர்ந்து நடத்துமாறு ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இவ்வமைப்பினரின் உதவித் திட்டங்களில் பங்கெடுக்கும், கொலம்பியா மற்றும் எத்தியோப்பிய புலம்பெயர்ந்த மக்கள் கொடுத்தனுப்பிய நன்கொடைகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இவ்வமைப்பினர் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்திருந்தாலும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றி வருவது குறித்து பாராட்டினார்.

இந்த உலகளாவிய அமைப்பை விளக்கும் சொல் ஒருமைப்பாட்டுணர்வு, இதுவே, திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் அடிப்படை கருத்தும் ஆகும், இச்சொல்லுக்கு உயிரூட்டம் கொடுப்பதற்கு, ஒதுக்கப்பட்டோர், ஏழைகள், மற்றும், புலம்பெயர்ந்தோருடன் நெருக்கமாகவும், பரிவன்போடும் இருக்கவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2022, 16:27