தேடுதல்

சாந்தா மார்த்தா குழு சாந்தா மார்த்தா குழு  (Vatican Media)

மனித வர்த்தகம் என்ற துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்

சாந்தா மார்த்தா குழுமம் தொடங்கப்பட்ட ஆண்டுகளிலிருந்தே, மனித வர்த்தகத்தின் நோக்கம் மற்றும் தன்மை பற்றிய ஓர் ஆழமான புரிதலை வளர்ப்பதில் அது தன்னை அர்ப்பணித்துள்ளது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித வர்த்தகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்ற சாந்தா மார்த்தா குழுவினரை மே 19, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொருவரும் கடவுள் வழங்கியுள்ள மனித மாண்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருக்கவும், குரலற்றோரின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.  

பன்னாட்டு தேசிய மற்றும் உள்ளூர் தளங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் வழியாக இந்தத்  துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பயனுள்ள வழிகள் கண்டறியப்படலாம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியாகப் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தேவையான கவனிப்பைப் பெறுவதற்கான வழிகள் உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்பாராதவிதமாக, நவீன அடிமைத்தனம் நம் உலகின் மிகவும் வளர்ந்த பகுதிகளில்கூட பரவி வருகிறது என்று கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், மனித வர்த்தகத்திற்கு எதிரான போராட்டம், பரந்துபட்ட நிலையில் பல உண்மைகளை அதிக கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.  

தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு, அத்துடன் நமது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வின் புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைப் பார்வையின் தேவை ஆகியவை, இந்த மனித வர்த்தகத்தைத் தடுப்பதில் அதிகம் பங்குவகிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடிமைப்படுத்தப்பட்டு சுரண்டப்படும் அனைவருக்கும் வழங்கப்படும்  உடன்பிறந்த உணர்வுநிலை பணிக்காகத் திருஅவை மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்றும், ஏனென்றால், இந்த வழியில்தான், கடவுளின் அன்புநிறை கனிவிரக்கம் வெளிப்படுத்தப்பட்டு சமூகத்தின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் திருத்தந்தை நான்காம் பயஸ் என்ற கட்டடத்தில் மூன்று நாள் கூட்டத்தை நடத்திய சாந்தா மார்த்தா குழுவினர், அதன் இறுதியில் இவ்வியாழனன்று திருத்தந்தையைச் சந்தித்தனர். இந்தக் கட்டடத்தில், பாப்பிறை சமூக அறிவியல் கழகம் செயல்பட்டு வருகிறது.  

சாந்தா மார்த்தா குழு

2014ம் ஆண்டில், இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், சாந்தா மார்த்தா குழுவை உருவாக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2022, 15:59