திருத்தந்தை: உடன்பிறந்த உணர்வு, அமைதியைக் கட்டியெழுப்பும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
தேவையில் இருப்போருக்கு உதவுவதன் வழியாக உடன்பிறந்த உணர்வை வளர்த்தெடுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 30 இத்திங்களன்று, யூதமத பன்னாட்டு நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
உலகெங்கும் வாழ்கின்ற யூதர்களுக்கு ஆதரவளிக்கவும், மனித உரிமைகளை ஊக்குவிக்கவும் அர்ப்பணித்துள்ள B'nai B'rith எனப்படும், பன்னாட்டு யூதமத நிறுவனத்தின் பிரதிநிதிகளை, இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நம் உடன்வாழ் சகோதரர் சகோதரிகளைப் பாரமரிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, ஏழைகளின் நலன், நீதி, மற்றும், படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக, யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து பணியாற்றுமாறு அழைப்புவிடுத்தார்.
யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உரையாடலை ஊக்கப்படுத்தி, ஆழப்படுத்துவது, நான் சிறுவனாக இருந்தபோதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது, ஏனென்றால் பள்ளியில் எனது வகுப்பறையில் யூதச் சிறார் இருந்தனர், அச்சமயத்தில் உரையாடலே, சந்திப்பையும், உடன்பிறந்த உணர்வின் தெளிவான அடையாளங்களையும் உருவாக்கியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மனித உடன்பிறந்த உணர்வை ஊக்குவித்தல்
நம்பிக்கையோடு வாழ்வதற்குள்ள உரிமை உட்பட, உதவி மற்றும், ஒருமைப்பாட்டுணர்வை, உலகளாவிய சமூகத்திடமிருந்து பெறுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது எனவும், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், நோயாளிகள் போன்றோருக்கு உதவுவது, மனித உடன்பிறந்த உணர்வை பெரிய அளவில் ஊக்குவிப்பதற்கு, முக்கிய வழியாகும் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அதேநேரம், உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தன்னல ஆதாயங்கள் மற்றும், கட்டுப்பாடற்ற பேராசை குறித்தும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அனைத்து வன்முறைகளோடு இடம்பெறும் புறக்கணிப்புத் தன்மை, ஆபேலை காயின் கொலைசெய்த கதையை நினைவுபடுத்துகின்றது என்றும், உடன்பிறந்த உணர்வே அமைதியைக் கட்டியெழுப்பும், மாறாக போர் ஓர் ஏமாற்றுவேலை என்றும் தெரிவித்தார்.
தொடர் வன்முறை, காழ்ப்புணர்வு போன்றவற்றைக் கைவிட்டு, ஒருவர் ஒருவரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, B’nai B’rith நிறுவனத்தின் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டோர், வலுவற்றோர், மற்றும், படைப்பைப் பாதுகாக்கும் தங்கள் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
B’nai B’rith பன்னாட்டு நிறுவனம், ஏழைகளுக்கு ஆதரவளிக்கவும், யூதமதவிரோதப் போக்கிற்கு எதிராகச் செயல்படவுமென, 1843ம் ஆண்டில் நியுயார்க் நகரில், ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்