உக்ரைன் போர், அன்புச் சமுதாயத்தின் தேவையை நினைவுபடுத்துகிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
நம் உலகை உலுக்கி எடுக்கின்ற பல்வேறு நெருக்கடிகளைக் களைவதற்கு, அக்கறையும் அன்பும்கொண்ட ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புமாறு, உலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
FIAT என்ற இயக்கத்தை உருவாக்கிய, பெல்ஜியம் நாட்டு மறைந்த கர்தினால் Leo Jozef Suenens அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது குறித்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்குபெற்ற ஏறத்தாழ 120 பிரதிநிதிகளை, ஏப்ரல் 23, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
தற்போது உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர், அன்புகூரும் ஒரு சமுதாயம் கட்டியமைக்கப்படவேண்டியதன் அவசரத் தேவையை நமக்கு நினைவுபடுத்துகிறது என்றுரைத்த திருத்தந்தை, FIAT அருங்கொடை இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், திருஅவையின் இதயமாக விளங்கும் நற்செய்தி அறிவிப்புப்பணியில் முக்கிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
உலகப்போக்கு ஆழமாக வேரூன்றியுள்ள இன்றைய சமுதாயத்தில், தங்களின் நம்பிக்கையை ஓர் உறுதியோடு அறிக்கையிடுகின்ற, மற்றும், எதிர்நோக்கின் சுடரை எரியச்செய்யும்முறையில் வாழ்ந்துகாட்டும் கிறிஸ்தவர்களும், தூய ஆவியாரின் தூண்டுதலின்படி, தெருக்களில் சென்று போதிக்கும் திருஅவையின் செயல்பாட்டாளர்களும் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்று திருத்தந்தை உரைத்தார்.
போரின் மத்தியில் மனித மாண்பு
உக்ரைன் போர் உட்பட, இவ்வுலகம் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நம் சகோதரர், சகோதரிகள், போரின் கொடூரங்களுக்குப் பலியாகுவதைப் பார்த்துவரும் நாம், மாண்பு, அமைதி, அன்பு ஆகியவற்றால் மிளிரும் ஒரு வாழ்வு தேவை என்பதை ஆழமாக உணர்கிறோம் என்று கூறினார்.
துன்புறுவோருடன் மறைப்பணி உணர்வில் உடனிருக்கும் முறைகளை, அன்னை மரியா நமக்கு கற்றுத்தருவார் என்றும், நாம் அவ்வன்னைக்குத் திறந்த உள்ளத்தினராய் இருக்கவேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறுவோருடன் உடன்பயணித்து, அவர்களின் மாண்பு காக்கப்பட உழைக்கவேண்டும், கடவுளின் அன்பை எல்லா இடங்களிலும் பரப்பவேண்டும் என்று, அவ்வியக்கத்தினருக்கு அழைப்புவிடுத்தார்.
பெல்ஜியம் நாட்டு மறைந்த கர்தினால் Leo Jozef Suenens அவர்கள், Veronica O’Brien என்பவரின் உதவியோடு FIAT அருங்கொடை இயக்கத்தை உருவாக்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்