ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையில் புதிய நியமனங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவராக, கர்தினால் மைக்கிள் செர்னி அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 23, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.
2022ம் ஆண்டு சனவரி முதல் தேதியிலிருந்து, அத்திருப்பீட அவையின் இடைக்காலத் தலைவராகப் பணியாற்றிய, கர்தினால் செர்னி அவர்கள், 2017ம் ஆண்டில் அவ்வவையின் குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வந்தார். 2019ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவரை கர்தினாலாக அறிவித்தார்.
1946ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, முன்னாள் செக்கோஸ்லாவாக்கியா நாட்டில் பிறந்த இயேசு சபை கர்தினால் செர்னி அவர்களின் குடும்பம், 1948ம் ஆண்டில் கனடா நாட்டிற்குப் புலம்பெயர்ந்தது. இவர், கனடா, இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, உரோம் ஆகிய பகுதிகளில் சமூக நீதியை ஊக்குவிப்பதற்காகப் பணியாற்றியிருப்பவர்.
செயலர்கள்
மேலும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இடைக்காலச் செயலராகப் பணியாற்றிவந்த அருள்சகோதரி Alessandra Smerilli, F.M.A அவர்களை, அவ்வவையின் செயலராகவும், அவ்வவையின் குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் பிரிவின் நேரடிப் பொதுச் செயலராகப் பணியாற்றிவந்த அருள்பணி Fabio Baggio அவர்களை, அவ்வவையின் நேரடிப் பொதுச் செயலராகவும், குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் பிரிவிற்குப் பொறுப்பாளராகவும் திருத்தந்தை நியமித்துள்ளார்.
டுவிட்டர் செய்தி
மேலும், ஏப்ரல் 24, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இறை இரக்க ஞாயிறை மையப்படுத்தி, இறைஇரக்கம் (#DivineMercy) என்ற ஹாஷ்டாக்குடன், டுவிட்டர் செய்தி ஒன்றை, ஏப்ரல் 23, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நமக்கு இறைவனின் இரக்கம் தேவை, இவ்விரக்கத்தின் வழியாக மட்டுமே கடவுளின் மீட்பு நம்மில் செயலாற்றுகிறது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்