கீவ் நகருக்கு திருத்தந்தை வழங்கும் 2வது மருத்துவ அவசர ஊர்தி
மேரி தெரேசா: வத்திக்கான்
கடவுளோடு ஒப்புரவாவதற்கு நமக்கு விடுக்கப்படும் அழைப்பின் குரலைக் கேட்பதற்கு இத்தவக்காலம் நம் இதயங்களைத் திறக்கவேண்டும் என்று அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 09, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.
பாஸ்கா மறைபொருளில் நம் கண்களைப் பதிக்கவும், கடவுளோடு திறந்த மற்றும், நேர்மையான மனத்தோடு உரையாடலை மேற்கொள்ள மனமாற்றப்படவும் அன்னை மரியாவிடம் மன்றாடுவோம் எனவும், திருத்தந்தை, அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சந்திப்புகள்
மேலும், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, ஐரோப்பிய அவையின் பொதுச் செயலர் Marija Pejčinović Buric, சுவீடன், ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதர் பேராயர் James Patrick Green ஆகியோரும், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தனித்தனியே சந்தித்து உரையாடினர்.
கர்தினால் Konrad Krajewski
இன்னும், உக்ரைன் நாட்டிற்கு மூன்றாவது முறையாகச் செல்லவிருக்கும், திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள், புனித வாரத்தின் மூன்று முக்கிய நாள்களின் திருவழிபாடுகளை கீவ் நகரில் நிறைவேற்றுவார். அந்நாட்டிற்கு திருத்தந்தை வழங்கியுள்ள இரண்டாவது மருத்துவ அவசர ஊர்தியையும் அவர் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குருத்தோலை ஞாயிறு
ஏப்ரல் 10, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுவார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்