தேடுதல்

இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், 

கடவுளின் எல்லையற்ற இரக்கத்தின் முகத்தைக் காட்டுங்கள்

கடவுளின் இரக்கத்தைத் தேடுவோரை அன்போடு வரவேற்று, தனிமை மற்றும், கவலையாய் இருக்கும் அவர்களுக்கு, அவரின் ஆறுதலை வழங்குங்கள் - இரக்கத்தின் மறைப்பணியாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

அருள்பணியாளர்கள், துறவியர் என ஏறத்தாழ ஆயிரம் இரக்கத்தின் மறைப்பணியாளர்களை, ஏப்ரல் 25, இத்திங்கள் காலையில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் எல்லையற்ற இரக்கத்தின் முகத்தை, அனைவருக்கும் காட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரக்கத்தின் மறைப்பணியாளர்கள், தங்களின் பணிகளைப் புதுப்பிப்பதற்கு உதவியாக, மூன்றாவது முறையாக உரோம் நகருக்கு வந்திருக்கும் அவர்களை, வத்திக்கானில் இத்திங்களன்று சந்தித்த திருத்தந்தை, கடவுளின் இரக்கத்தைத் தேடுவோரை அன்போடு வரவேற்று, தனிமை மற்றும், கவலையாய் இருக்கும் அவர்களுக்கு, அவரின் ஆறுதலை வழங்குங்கள் என்று கூறினார்.

கடவுளின் உடனிருப்பு, அவரது அன்பு, இரக்கம் மற்றும், மன்னிப்புக்குச் சாட்சிகளாக விளங்குவதற்காக, 2016ம் ஆண்டில் இரக்கத்தின் யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டபோது, திருத்தந்தை இரக்கத்தின் மறைப்பணியாளர்களை உருவாக்கினார்.

கடவுள் ரூத்து வழியாக...

தன் வயதுமுதிர்ந்த மாமியார் நகோமிக்கு தன்னலமற்ற சேவையாற்றிய விவிலியப் பெண் ரூத்தை, தங்களின் மறைப்பணிக்கு முன்மாதிரிகையாய் கொண்டிருக்குமாறு கூறியத் திருத்தந்தை, கடவுள் ஒருபோதும் நேரடியாகப் பேசுவதில்லை, மாறாக, அவர், ரூத்து, நகோமிக்குக் காட்டிய கனிவன்புச் செயல்கள் வழியாகப் பேசுகிறார் என்றுரைத்தார்.   

வாழ்வின் பாதை, பலநேரங்களில் கடினமானதாய், முழுவதும் கவலைநிறைந்ததாய் இருக்கின்றவேளை, கடவுள் தம் அன்பை வெளிப்படுத்த தம் பாதையை அமைக்கிறார் என்றும், மக்களின் வாழ்வில் கடவுளின் இருப்பைத் தெளிந்து தேர்வுசெய்ய, அவர் நமக்கும் அழைப்புவிடுக்கிறார் என்றும், திருத்தந்தை கூறினார்.

நம் மறைப்பணி வழியாக, கடவுளின் குரலை வழங்கவும், அவரது இரக்கமுள்ள முகத்தைக் காட்டவும் இரக்கத்தின் மறைப்பணியாளர்களாகச் செயல்படுவது அவரவரைப் பொறுத்தது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் மக்களின் அன்றாட வாழ்வில் அமைதியாகப் பணியாற்றுகிறார் என்று கூறினார்.

தங்களிடம் வருவோரை, முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், அவர்களிடம் இரக்கத்தின் முகத்தைக் காட்டுமாறும், அவர்களைத் தீர்ப்பிடுவதைத் தவிர்க்குமாறும், மன்னிப்பு வழங்குவதில் தாராளமாகச் செயல்படுமாறும், இரக்கத்தின் மறைப்பணியாளர்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2022, 16:29