தேடுதல்

ராபாட்டில் திருத்தந்தையின் மூவேளை செப உரை

போரினால் சிதைந்துள்ள உக்ரைனில் மனிதாபிமானப் பெருந்துயர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுகின்றன. எனவே இப்போது நாம் அமைதிக்காகச் செபிப்போம்.

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்திருப்பலியின் இறுதியில் மால்ட்டா பேராயர் Scicluna அவர்கள், மால்ட்டா மக்கள் சார்பாக, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயர் Scicluna அவர்களின் இனிய வார்த்தைகளுக்கு நன்றி கூறுகிறேன், உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும் என்று கூறினார். மால்ட்டா அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள், எனது சகோதரர் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மால்ட்டா மற்றும், கோசோ தீவுகளின் பொதுநிலை நம்பிக்கையாளர்கள் ஆகிய அனைவரின் இனியநல் வரவேற்பிற்கு நன்றி. இன்று மாலையில் புலம்பெயர்ந்த நம் சகோதரர் சகோதரிகளைச் சந்தித்தபின்னர் உரோம் நகருக்குத் திரும்புவேன். இந்நாள்களின் பசுமையான பல நினைவுகளையும், நிகழ்வுகளையும் என்னோடு எடுத்துச் செல்கிறேன். இந்நாள்களில் நான் சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும், மதங்களின் பிரதிநிதிகளையும் வாழ்த்துகிறேன். உங்களுக்காக நான் செபிப்பதுபோல, எனக்காகவும் செபியுங்கள். ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம்.  

இத்தீவுகள், இறைமக்களின் உணர்வைச் சுவாசிக்கின்றன. நம்பிக்கை, மகிழ்ச்சியில் வளர்கிறது மற்றும், கொடுப்பதில் அது வலுவடைகிறது என்பதை மனதில் இருத்தி, அந்த உணர்வைத் தொடர்ந்து சுவாசியுங்கள். 15 ஆண்டுகளுக்குமுன் புனிதராக அறிவிக்கப்பட்ட Dun Ġorġ Preca அவர்கள், உங்களில் பலர் புனித வாழ்வு மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளார். இறுதியாக இளையோரிடம் ஒன்றுகூற விரும்புகிறேன். இளையோரே, நீங்களே உங்களின் வருங்காலம். அன்பு நண்பர்களே, வாழ்வின் அழகான காரியங்கள் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவை எவை என்று உங்களுக்குத் தெரியுமா? சுதந்திரமாக வாழவைக்கும் அன்பில் நம்மை முழுவதும் கொடுப்பதில் மகிழ்ச்சி உள்ளது. அந்த மகிழ்ச்சிக்கு ஒரு பெயர் உள்ளது. அப்பெயரே இயேசு. அவரோடு அன்பில் ஒன்றித்திருங்கள். இரக்கத்தின் கடவுளாகிய அவர் உங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார், உங்களோடு கனவு காண்கிறார், உங்கள் வாழ்வை அன்புகூர்கிறார், உங்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டார். ஆண்டவரும், அன்னை மரியாவும் உங்களோடு பயணிப்பார்களாக. மேலும், போரினால் சிதைந்துள்ள உக்ரைனில் மனிதாபிமானப் பெருந்துயர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுகின்றன. எனவே இப்போது நாம் அமைதிக்காகச் செபிப்போம். துன்புறுவோருக்கு உதவுவதிலும், செபிப்பதிலும் மனம்தளரவேண்டாம். அமைதி உங்களோடு இருப்பதாக. இவ்வாறு மூவேளை செப உரை நிகழ்த்தி அம்மக்களோடு சேர்ந்து உலகில் அமைதிக்காகச் செபித்து, தன் ஆசிரையும் அளித்தார்,

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2022, 15:41

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >