தேடுதல்

திருவிழிப்புத் திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை திருவிழிப்புத் திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை  

திருத்தந்தையின் திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

உயிர்த்தெழுதலின் ஒளி என்பது கல்லறைக்கு வந்த பெண்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்வது மட்டுமல்ல, மாறாக, இயேசுவின் திருத்தூதர்களாக அவர்களை மாற்றுவதும்தான் அதன் நோக்கமாக அமைந்திருந்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 14, புனித சனி இரவு, திருவிழிப்புத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லூக்கா நற்செய்தியிலிருந்து (லூக் 24 1:10) மூன்று முக்கிய கருத்துக்களை மையப்படுத்தி தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, “அவர்கள் கண்டனர், அவர்கள் கேட்டனர், அவர்கள் உயிர்ப்பின் நற்செய்தியை அறிவித்தனர்” என்ற மூன்று இறைவார்த்தைகளின் அடிப்படையில், இறப்பிலிருந்து உயிர்ப்புக்குக் கடந்து சென்ற நமதாண்டவரின் பாஸ்கா பெருவிழாவில் நுழைவோம்.  

முதலாவதாக, ‘பெண்கள் கண்டனர்’. கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை (லூக் 24;2). இயேசுவின் உயிர்ப்பு என்பது நம் எதிர்பார்ப்புகளை வருத்தப்படுத்தவதன் வழியாகத் தொடங்குகிறது. ஆனால், இது நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் நம்பிக்கையைத் தரும் ஒரு கொடையாக வருகிறது. பயம், வலி, மற்றும் இறப்பு ஆகியவை நம் வாழ்வின் முடிவாக இருக்க முடியாது என்பதோடு மட்டுமன்றி, வாழ்வை நம்பிக்கையோடு பார்க்கும் வித்தியாசமான கண்களை இன்றிரவு ஆண்டவர் இயேசு நமக்குக் கொடுக்க விரும்புகிறார். உண்மை மரணம் நம்மை அச்சத்தால் நிரப்பும்; அது நம்மை முடக்கிவிடும். ஆனால், இறைவன் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் நம் பார்வையை உயர்த்தி, நம் கண்களிலிருந்து சோகம் மற்றும் துயரத்தின் திரையை அகற்றி, கடவுள் கொண்டுவரும் நம்பிக்கைக்கு நம் இதயங்களைத் திறப்போம்!

இரண்டாவதாக, ‘பெண்கள் கேட்டனர்.’ அதாவது, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்." (லூக் 24;5-6) என்ற செய்தியைக் கேட்டனர். நமது செயல்களில் நாம் தொடர்ந்து இறந்துகொண்டே இருக்கும்போதும், நாம் கடந்த காலத்தின் கைதிகளாக இருக்கும்போதும், கடவுளால் மன்னிக்கப்பட நாம் நம்மையே அனுமதிக்க மறுக்கும்போதும், இயேசுவின் அன்பைப் பெறுவதில் மற்றும் அவருக்காக நமது வாழ்வைத் தீர்மானிப்பதில் நமது தீய செயல்களை முறியடிக்காமல் இருக்கும்போதும், நாம் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாட முடியாது. ஆயினும் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார். ஆகவே, கல்லறைகளுக்குளேயே நாம் தங்கிவிடாமல், உயிருள்ள அவரைத் தேடி  ஓடுவோம்!

மூன்றாவதாக, பெண்கள் உயிர்ப்பின் நற்செய்தியை அறிவித்தனர்.’ "அவர்கள் கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள் (வசனம் 9). இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா என்பது, வெறுமனே இயேசுவின் மரணத்திற்காகத் துயரம்கொண்டு அழுபவர்களை ஆறுதல்படுத்துவதற்காக அல்ல, மாறாக தீமை மற்றும் மரணத்தின் மீதான கடவுளின் வெற்றியின் செய்திக்கு நம் இதயங்களைத் திறக்கவேண்டும் என்பதுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தமாக இருக்கின்றது. உயிர்த்தெழுதலின் ஒளி என்பது கல்லறைக்கு வந்த பெண்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்வது மட்டுமல்ல, மாறாக, இயேசுவின் திருத்தூதர்களாக அவர்களை மாற்றுவதும்தான் அதன் நோக்கமாக அமைந்திருந்தது.

உயிர்த்த கிறிஸ்துவை அனுபவிக்கவும், அனுபவித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்; இறைவனின் மகிழ்ச்சியை உலகில் பரப்புவதற்காகவுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இதற்குத் தடையாய் இருக்கும் கற்களை நாம் உருட்டி அகற்றவேண்டும். போரின் பயங்கரங்கள் நிறைந்த இந்நாட்களில் அமைதிக்கான முயற்சிகள் வழியாக, உடைந்த உறவுகளுக்கு இடையே நல்லிணக்கச் செயல்களை ஏற்படுத்துதல், தேவைப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டுதல், சமத்துவமின்மை மற்றும் உண்மை நிலைகளுக்கு மத்தியில் நீதியின் செயல்களை அறிவித்தல், பொய்களின் மத்தியில் உண்மையை நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் வழியாக உயிர்த்த ஆண்டவரை நமது அன்றாட வாழ்வில் கொண்டு வருவோம்.

இறுதியாக சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுடன் இணைந்து உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவோம்! அவர் இன்னும் வாழ்கிறார்! இன்றும் அவர் நம் நடுவே நடந்து நமக்குள் மாற்றம் தந்து நம்மை விடுதலை செய்கிறார் என்ற சிந்தனைகளோடு திருத்தந்தை தனது மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2022, 14:21