மறைக்கல்வியுரை: தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பிணைப்புக்களின் அழகு

தலைமுறைகளை இணைக்கின்ற பிணைப்புகள், குடும்பங்களின் தரம் சிறப்படைவதற்கும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அதிகமாக உதவுகின்றன - புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்தாலியில் வசந்தகாலம் தொடங்கியிருப்பதன் அடையாளமாக மிதமான குளிரோடு சூரியனின் இலேசான கதிர்களும் சேர்ந்து காலநிலை இதமாக இருக்கிறது. இச்சூழலில், உரோம் பெருநகருக்கு வருகின்ற சுற்றுலா, மற்றும், திருப்பயணிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏப்ரல் 27, இப்புதன் காலையில், பொது மறைக்கல்வியுரையைக் கேட்பதற்காக, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, முதுமை பற்றிய ஏழாவது மறைக்கல்விப் பகுதியை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அம்மறைக்கல்வியில், தலைமுறைகளை இணைக்கின்ற பிணைப்புகள், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், குடும்பங்களின் தரம் உயர்வதற்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதை திருத்தந்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் முதலில், மருமகள் ரூத்து, மாமியார் நகோமியிடம் காட்டிய அன்பு குறித்த விவிலியப் பகுதி, ரூத்து நூலின் முதல் பிரிவிலிருந்து வாசிக்கப்பட்டது. அதற்குப்பின், திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.

புதன் மறைக்கல்வியுரை 270422
புதன் மறைக்கல்வியுரை 270422

நகோமி இரு மருமக்களிடம், “உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்… அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்; அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்” என்றார். (ரூத்து 1,8.16-17)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். திருவிவிலியத்தின் ஓர் அணிகலனாகிய அற்புதமான ரூத்து நூலினால் எழுச்சியூட்டப்பட இன்று நம்மை அனுமதிப்போம். ரூத்து உவமை, தம்பதியரின் உறவால் உருவாக்கப்பட்டதையும் கடந்ததொரு குடும்பப் பிணப்புக்களின் அழகின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. இறைவார்த்தையின் ஒளியில், முதுமையின் அர்த்தம் மற்றும், மதிப்புபற்றிய புதன் மறைக்கல்வியுரைப் பகுதியில், ரூத்து நூலில் வழங்கப்பட்டுள்ள கைம்பெண் நகோமி என்பவர் பற்றி, நாம் இப்போது சிந்திப்போம். இந்தக் குறுகிய, ஆனால் அழகான கதை, வயதுமுதிர்ந்த நகோமிக்கும், அவரது மருமகள் ரூத்துக்கும் இடையே நிலவிய அன்புறவு, மற்றும், ஒருவர் ஒருவருக்கு காட்டிய ஆதரவு பற்றி எடுத்துரைக்கின்றது. அந்நிய நாட்டில் வாழ்ந்துவந்த நகோமி, அவரது இரு மகன்களும் இறந்தபின்னர், தன்னந்தனியராய் விடப்பட்டார். தனக்கு நேர்ந்த துயரத்தைப் பொருட்படுத்தாமல், தனது இரு மருமக்களையும், அவர்களது சொந்த மக்களோடு இருக்குமாறு ஊக்கப்படுத்தினார். அதேநேரம், தானும் தனது சொந்த யூதா நாட்டிலுள்ள நகரமான பெத்லகேமுக்குத் திரும்பிச்செல்லத் தீர்மானித்தார். அப்போது ரூத்து, தன் அன்புக்குரிய மாமியாரைத் தனியே விட்டுவிட விரும்பாமல், “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்” (ரூத்து 1:16)   என்று சொல்லி. அவரோடு யூதா நாட்டிற்குச் சென்றார். ரூத்துவின் அன்பு நகோமிக்கு ஆதரவாக இருந்தது.  நகோமியும், தன் மருமகள் ரூத்துவின் அன்புக்குப் பிரதிபலனாக, போவாசு என்ற புதிய கணவரைக் கண்டுகொள்ள உதவி செய்கிறார். கடவுளும், இவர்களது திருமணத்தை ஆசிர்வதித்து, ‛ஓபேது’ என்ற மகனை அவர்களுக்கு அருளினார். ஓபேதின் மகனாக ஈசாய் பிறந்தார். ஈசாயின் மகனாக தாவீது பிறந்தார். ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாய் இருந்த இவ்விரண்டு பெண்களின் கதை, கடவுளின் பராமரிப்புத் திட்டத்தில், அன்பு, மற்றும், பிரமாணிக்கத்தின் உடன்படிக்கை, தலைமுறைகளை இணைக்கின்றது என்பதையும், தலைமுறைகளை இணைக்கின்ற இந்தப் பிணைப்புகள், குடும்பங்களின் தரம் மிக உன்னதமாக உயர்வதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும் நமக்குக் காட்டுகின்றன. அதோடு, தன் உறுப்பினர்கள் இளையோரோ அல்லது வயது முதிர்ந்தோரோ யாராக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரின் மாண்பும், கொடைகளும் மதிக்கப்படும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் இந்தப் பிணப்புகள் உதவுகின்றன என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

புதன் மறைக்கல்வியுரை 270422
புதன் மறைக்கல்வியுரை 270422

இவ்வாறு, மாமியார் நகோமி-மருமகள் ரூத்து இவர்களுக்கு இடையே நிலவிய அன்புறவை விளக்கி தன் இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், இம்மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்வில், நம் இறைத்தந்தையின் அன்புநிறை இரக்கம் பொழியப்படச் செபித்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2022, 11:39