குடும்ப வாழ்வின் மதிப்பு மீண்டும் கண்டுணரப்படவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
குடும்ப வாழ்வில் இக்காலக்கட்டத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், மற்றும், நீண்டகாலமாகத் தொடரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அவ்வாழ்வின் மதிப்பு, மற்றும், அழகு, மீண்டும் கண்டுகொள்ளப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 29, இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பாப்பிறை சமூக அறிவியல் கழகம், “நன்மைபயக்கும் உறவுமுறையாக குடும்பம்: அன்பின் சவால்" என்ற தலைப்பில், கடந்த மூன்று நாள்களாக வத்திக்கானில் நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் ஏறத்தாழ 45 பிரதிநிதிகள் பங்குபெற்றனர்.
இப்பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருமணம் மற்றும், இக்காலத்தில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பதை மையப்படுத்தி, தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
குடும்ப வாழ்வின் சவால்கள்
இக்காலத்தின் சமுதாய மாற்றங்கள், உலகெங்கும் திருமணம், மற்றும், குடும்பங்களின் வாழ்வுமுறையை மாற்றி வருகின்றன என்றும், அவை, குடும்ப வாழ்வில் நீண்டகால மற்றும், பன்முக நெருக்கடிகளை முன்வைக்கின்றன என்றும், திருத்தந்தை கூறினார்.
குடும்பம் சமுதாயத்திற்கு நல்லது, ஆனால் அது, தனிமனிதர்களால் அமைந்தது என்றில்லாமல், ஒருவர் ஒருவரின் நிறைவாழ்வின் பிணைப்பில் அடித்தளமிடப்பட்ட உறவாக அமையவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்றும், திருத்தந்தை கூறினார்.
பிரமாணிக்கமுள்ள அன்பு, நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகிய பண்புகளைப் பகிர்ந்து கொள்வது, குடும்பத்தின் நன்மைபயக்கும் மற்றும், மகிழ்வைக் கொணரும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம், 'நாம்' என்ற உறவுமுறை வழியாக மக்களை மனிதப்பண்புள்ளவர்களாக ஆக்குகிறது என்றும் கூறினார்.
திருஅவையின் சமூகக் கண்ணோட்டம், குடும்பத்திற்குத் தேவையான தகுதியான அன்புறவு முறையைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்