தேடுதல்

பாப்பிறை Teutonic குருத்துவப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு பாப்பிறை Teutonic குருத்துவப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு  

அருள்பணியாளர்கள் கிறிஸ்துவின் மன்னிப்பிற்கு சாட்சி பகரவேண்டும்

திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்கள், 1522ம் ஆண்டில் தொடங்கிய தனது குறுகியகாலத் தலைமைப் பணியில் எல்லாவற்றிற்கும் மேலாக, திருஅவையிலும், உலகிலும், ஒப்புரவை உருவாக்கும் வழிகளைத் தேடியவர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்து நமக்கு வழங்குகின்ற மன்னிப்பு, மற்றும், மகிழ்ச்சிக்கு,  அருள்பணியாளர்கள், சாட்சி பகரவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 07, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் தான் சந்தித்த ஜெர்மன் அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களிடம் கூறினார்.

ஜெர்மன் நாட்டுத் திருத்தந்தையாகிய ஆறாம் ஏட்ரியன் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் நகரிலுள்ள பாப்பிறை Teutonic அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை ஆறாம் ஏட்ரியன் அவர்களின் தலைமைப் பணிக்காலம் பற்றி எடுத்துரைத்தார்.

ஒப்புரவு திருப்பணி

திருத்தந்தை ஆறாம் ஏட்ரியன் அவர்கள்,1522ம் ஆண்டில் தொடங்கிய தனது குறுகியகாலத் தலைமைப் பணியில் அவர் விட்டுச்சென்ற மரபுரிமைகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர் தனது தலைமைப் பணியில், எல்லாவற்றிற்கும் மேலாக, திருஅவையிலும், உலகிலும், ஒப்புரவை உருவாக்கும் வழிகளைத் தேடியவர் என்று கூறினார்.

ஒப்புரவு திருப்பணி ஆற்றும் பொறுப்பை, கடவுள் திருத்தூதர்களிடம் ஒப்படைத்தார் என்ற புனித பவுலடியாரின் சொற்களை, திருத்தந்தை ஆறாம் ஏட்ரியன் அவர்கள் நடைமுறைப்படுத்தியவர் என்றுரைத்த திருத்தந்தை, சீர்திருத்த லூத்தரன் கிறிஸ்தவ சபையின் தோற்றம், மற்றும், உலகின் கிழக்கில், ஒட்டமான் முஸ்லிம்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றை, இத்திருத்தந்தை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்றும் எடுத்துரைத்தார்.

இத்திருத்தந்தை, லூத்தரன் கிறிஸ்தவ சபையினரோடு ஒப்புரவு முயற்சிகளை மேற்கொண்டார், திருஅவையில் குழப்பத்திற்கு இட்டுச்சென்ற, திருப்பீடத் தலைமையக உறுப்பினர்களின் பாவங்களுக்கு பொதுப்படையாக இவர் மன்னிப்பு கேட்டார் என்றும், ஒட்டமான் படைகளால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தலை அகற்ற, பிரெஞ்சு மற்றும், இஸ்பானிய ஆட்சியாளர்களின் உதவியை நாடினார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தனை திட்டங்களை மேற்கொண்ட திருத்தந்தை 6ம் ஏட்ரியன் அவர்கள், விரைவிலேயே இறைபதம் சேர்ந்தது, அவரின் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமலேயே போய்விட்டன, எனினும், நம்பிக்கை, நீதி, அமைதி ஆகியவற்றுக்கு அத்திருத்தந்தை அச்சமின்றியும், சோர்வின்றியும் ஆற்றிய பணிகள் திருஅவையின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கிறிஸ்துவின் ஊழியராக, இத்திருத்தந்தை வாழ்ந்த முன்மாதிரிகையான வாழ்வு, ஜெர்மானிய மாணவர்களின் குருத்துவ அழைப்பிற்குத் தூண்டுதலாக உள்ளது என்றும், இக்குருத்துவப் பயிற்சி மாணவர்கள், அத்திருத்தந்தையின் வாழ்வுப் பாதையை, குறிப்பாக, ஒப்புரவின் திருப்பணியாளர்களாக அவரைப் பின்பற்றுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.    

அன்பு, ஞானம், மிகுந்த இரக்கம் ஆகிய பண்புகளோடு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுமாறும், அவ்வருளடையாளத்தை நிறைவேற்றுபவர், சித்ரவதை செய்பவராக இல்லாமல், மன்னிப்பவராக இருப்பதே அவரது கடமை என்பதையும் நினைவுபடுத்திய    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் மன்னிப்பின் அனைத்துப் நல்ல பணியாளர்கள், மற்றவரை மன்னிப்பது குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும், அமைதி மற்றும், ஒன்றிப்பின் மனிதர்களாக, உறவுகளில் இரக்கமுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

திருத்தந்தை 6ம் ஏட்ரியன்

ஒரு காலத்தில் உரோமைப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த, தற்போதைய நெதர்லாண்டிலின் Utrechtல் 1459ம் ஆண்டில் பிறந்த திருத்தந்தை ஆறாம் ஏட்ரியன் அவர்கள், 1522ம் ஆண்டு சனவரி மாதம் 9ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1523ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை திருஅவையின் தலைமைப் பணியாற்றிய இத்திருத்தந்தை, 455 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்வரை, இத்தாலியரல்லாத முதல் திருத்தந்தையாக இருந்தவர். மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குமுன், ஜெர்மானிய உலகிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையாகவும் இருந்தவர் 6ம் ஏட்ரியன் அவர்கள். இவர், பேரரசர் 5ம் சார்லஸ் அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசான் ஆவார். பிரெஞ்சு மற்றும், இஸ்பானியக் கர்தினால்களின் பிரிவினைகளுக்கு இடையே ஏற்பட்ட சமரசத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரின் பாப்பிறை தலைமைப்பணிக் காலம் ஈராண்டுகளுக்கும் குறைவே. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஏப்ரல் 2022, 15:01