தேடுதல்

உயிர்ப்பு ஞாயிறு போர் நிறுத்தத்திற்கு திருத்தந்தை அழைப்பு

ஆயுதங்களை அதிகம் வழங்குவது, போர் நிறுத்தத்திற்கு உதவாது. உண்மையான உரையாடல் வழியாக, அமைதிக்கு இட்டுச்செல்லும் போர்நிறுத்தமே தேவைப்படுகின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உக்ரைன் மீது இரஷ்யா நடத்திவரும் கடுமையான தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும், மற்றும், போரினால் சிதைந்துள்ள உக்ரைனில் அமைதி நிலவுவதற்கு, உண்மையான பேச்சுவாரத்தைகள் இடம்பெறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 10, இஞ்ஞாயிறன்று மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 10, இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றியபின், மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்படட்டும், மற்றும், உயிர்ப்பு ஞாயிறு போர் நிறுத்தம் துவக்கப்படட்டும் என்று உருக்கமாக விண்ணப்பித்துள்ளார்.        

மூவேளை செபத்தில் அன்னை மரியாவிடம் நாம் வேண்டும்போது, “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்று, வானதூதர் அன்னை மரியாவுக்குக் கூறியதை நாம் நினைவில்கொள்ளவேண்டும் என்று உரைத்த திருத்தந்தை, போரையும் அவரால் முடிவுக்குக் கொணர முடியும் என்று கூறினார்.

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை

ஒவ்வொரு நாளும், மிகக்கொடிய படுகொலைகளையும், அப்பாவி மக்களுக்கு எதிராக மிகக்கேவலமான கொடூரங்களையும் நம்முன் நிறுத்துகின்ற போர், முடிவுக்குவராது என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், அதை முடிவுக்குக் கொணர கடவுளால் முடியும் என்றும்,  இக்கருத்துக்காகச் செபிக்குமாறும், புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஏறத்தாழ 65 ஆயிரம் திருப்பயணிகளிடம் திருத்தந்தை கூறினார்

உயிர்ப்பு போர்நிறுத்தம்

ஆண்டவராம் இயேசு கிறிஸ்து, பாவம், மற்றும், மரணத்தின் மீது அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு, கிறிஸ்தவர்கள் இவ்வாரத்தில் தங்களையே தயாரித்துவருவதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வெற்றி, பாவம், மற்றும், மரணத்தின் மீதுதானே தவிர, யாரோ ஒருவர் மீதும், யாரோ ஒருவருக்கு எதிரானதும் அல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். 

இன்று நடைபெறும் போரை, உலகின் வழிமுறையில் வெற்றிகாண ஏன் முயற்சிக்கவேண்டும் என்றும், இது தோல்வியின் வழிமுறை மட்டுமே என்றும் கூறியத் திருத்தந்தை, தீமையின் ஆதிக்கத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கு சிலுவையைச் சுமந்த கிறிஸ்து வெற்றியடைய ஏன் நாம் அனுமதிக்கக் கூடாது? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

வாழ்வு, அன்பு, மற்றும், அமைதி ஆகியவை ஆட்சிசெய்யும்வண்ணம் கிறிஸ்து இறந்தார், எனவே, ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்படட்டும், மற்றும், உயிர்ப்புப் பெருவிழா போர்நிறுத்தம் துவக்கப்படட்டும் என்று மீண்டும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இடிந்த கட்டடங்களில் கொடியை ஊன்றுவதில் வெற்றி கிடையாது

ஆயுதங்களை அதிகம் வழங்குவது, போரை மீண்டும் தொடங்குவதாகவே இருக்கும், இது போர் நிறுத்தத்திற்கு உதவாது எனவும், உண்மையான உரையாடல் வழியாக, அமைதிக்கு இட்டுச்செல்லும் போர்நிறுத்தமே தேவைப்படுகின்றது எனவும், இதற்கு, மக்களின் பொது நன்மைக்காக சில தியாகங்கள் தேவைப்படுகின்றன எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

உண்மையில், இடிந்த கட்டடங்களில் கொடியை ஊன்றுவதில் வெற்றி கிடையாது எனவும் உரைத்த திருத்தந்தை, “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்பதை மீண்டும் நினைவுபடுத்தி, நம் விண்ணப்பங்களை அன்னை மரியாவின் பரிந்துரையிடம் சமர்ப்பிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தென் அமெரிக்க நாடான பெருவில் இடம்பெற்றுவரும், சமுதாயப் பதட்டநிலைகளைக் குறிப்பிட்டு, துன்புறும் அம்மக்களோடு தன் அருகாமையை வெளிப்படுத்தி, அமைதியான முறையில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காணுமாறு அந்நாட்டினரை ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2022, 13:00