தேடுதல்

சுலோவாக்கியா திருப்பயணிகள் சந்திப்பு சுலோவாக்கியா திருப்பயணிகள் சந்திப்பு 

திருத்தந்தை: ஒருமைப்பாடு வழியாக அமைதியைக் கட்டியெழுப்புங்கள்

சுலோவாக்கியா சமுதாயம், மற்றும், திருஅவையின் பன்மைத்தன்மை, அதன் விருந்தோம்பல் கலாச்சாரம் ஆகியவற்றின் வளமையைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் - சுலோவாக்கியா திருப்பயணிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒவ்வொரு நாள் வாழ்விலும், பிறரன்பு, மற்றும், வரவேற்பு ஆகிய பண்புகளை வெளிப்படுத்தி, அமைதியைக் கட்டியெழுப்புங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 30, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த சுலோவாக்கியா நாட்டின் 2,500 திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்கு நன்றிகூரும் நோக்கத்தில், உரோம் மாநகருக்குத் திருப்பயணமாக வந்துள்ள அந்நாட்டுத் திருப்பயணிகளுக்கு உரையாற்றியபோது, அம்மக்கள் உக்ரைன் நாட்டு புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

குடும்பப் பிணைப்புகளை உடைத்து, சிறார் தங்கள் தந்தையரின் பிரசன்னம் மற்றும், கல்வியை இழக்கச்செய்து, தாத்தாக்கள் பாட்டிகள் தனியே புறக்கணிக்கப்படும் நிலையை போர் எவ்வாறு உருவாக்கியுள்ளது என்பதற்கு, சுலோவாக்கியர்கள் சாட்சிகளாக உள்ளதை திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தனது சுலோவாக்கியா நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் சந்தித்த அனைவரையும் மறக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, இந்நிகழ்வில் வயதுமுதிர்ந்த கர்தினால் யோசேப் தொம்கோ அவர்கள் உட்பட சுலோவாக்கியா நாட்டின் பாராளுமன்றத் தலைவர், அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவர் உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்துகொள்வதற்கும், அந்நாட்டு அரசுத்தலைவர் தனக்கு சிறப்பு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பதற்கும் நன்றி தெரிவித்தார்.

சுலோவாக்கியா திருப்பயணிகள் சந்திப்பு
சுலோவாக்கியா திருப்பயணிகள் சந்திப்பு

கிறிஸ்தவ மேற்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்கும் பாலம் போன்று, சுலோவாக்கியாவில் திருஅவை, பல்வேறு வழிபாட்டுமுறைகள் மற்றும், மரபுகளோடு எவ்வளவு வளமாக வாழ்கின்றது என்பதை இந்நேரத்தில் என்னால் பார்க்க முடிகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனாலேயே, பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த இளையோர், குடும்பங்கள், வயதுமுதிர்ந்தோர் ஆகிய எல்லாரும் தொடர்ந்து ஒன்றிணைந்து வாழுங்கள் என்று விண்ணப்பிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

சந்திப்புக் கலாச்சாரம்

சுலோவாக்கியா திருப்பயணிகள் சந்திப்பு
சுலோவாக்கியா திருப்பயணிகள் சந்திப்பு

பன்மைத்தன்மைகளுக்கு இடையே நல்லிணக்கத்தைத் தேடுவதில் சந்திப்புக் கலாச்சாரம் கட்டப்படுகின்றது, இந்நல்லிணக்கத்திற்கு, வரவேற்பு, திறந்த உள்ளம், மற்றும், படைப்பாற்றல் ஆகியவை தேவைப்படுகின்றன, வாழ்வின் இந்த அடித்தளமே நற்செய்தி, அங்கே தூய ஆவியார் இருக்கின்றார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஆயினும், இந்நல்லிணக்கம், சிலவேளைகளில் நம் பாவங்கள் மற்றும், குறைகளால் காயப்படுத்தப்படுகின்றது என்பதை வரலாற்றிலும், வாழ்விலும் பார்த்திருக்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வின் பாலங்களைக் கட்டியெழுப்புங்கள் என்றும், புனிதர்கள் சிரில் மெத்தோடியசின் மரபுரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2022, 15:59