Praedicate evangelium திருத்தூதுகொள்கை விளக்கத்திற்குப் பாராட்டு
மேரி தெரேசா: வத்திக்கான்
"Praedicate evangelium" என்ற, திருப்பீட தலைமையகத்தின் சீர்திருத்தம் குறித்த புதிய திருத்தூது கொள்கை விளக்கம் பற்றி, ஹொண்டூராஸ் நாட்டு கர்தினால் ஆஸ்கர் ரொட்ரிகெஸ் மாராதியாகா அவர்கள் வழங்கியுள்ள நீண்டதொரு நேர்காணலில், அவர் C-9 கர்தினால்கள் ஆலோசனை அவை மேற்கொண்ட திருப்பீடச் சீர்திருத்தப் பணிகள் மற்றும், அவற்றில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கர்தினால் மாராதியாகா அவர்கள் வழங்கியுள்ள நேர்காணல், நூல் வடிவில் வெளிவந்துள்ளவேளை, அந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது இடம்பெற்றுவரும் சீர்திருத்தங்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க கொள்கை விளக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்று எழுதியுள்ளார்.
மேலும், தான் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் அவைக்குமுன் இடம்பெற்ற கர்தினால்கள் கூட்டத்தில், புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், திருப்பீட தலைமையகத்தில் புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும், இப்பணி, உடனடியானதும், தேவையானதுமாக உள்ளது என கூறப்பட்டது என்றும், திருத்தந்தை தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
“Praedicate Evangelium” புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தின் அர்த்தம், மற்றும், இலக்குகள் குறித்து கர்தினால் மாராதியாகா அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் என்று பாராட்டியுள்ள திருத்தந்தை, இக்கொள்கை விளக்கம், இம்மிகப்பெரும் சீர்திருத்தப் பணிகளின் ஒரு பகுதியே எனவும், அதிலும் அது மிக முக்கியமான பகுதி எனவும் கூறியுள்ளார்.
அமைப்புமுறை மற்றும், நிர்வாகமுறையில் சீர்திருத்தங்கள், நிச்சயமாக அவசியமானவை, ஆயினும், மக்களின் மனங்களும், இதயங்களும் புதுப்பிக்கப்படவேண்டியது உண்மையிலேயே மிக முக்கியமானது என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எல்லாரும் நம் பங்கை ஆற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று பதிவுசெய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்