திருத்தைலம் பூசுதல் திருப்பலியில் மறையுரையாற்றும் திருத்தந்தை திருத்தைலம் பூசுதல் திருப்பலியில் மறையுரையாற்றும் திருத்தந்தை  

திருத்தந்தையின் திருத்தைலம் பூசுதல் திருப்பலி மறையுரை

அருள்பணியாளர்கள் இயேசுவின் மீது கண்களைப் பதிக்க வேண்டும், மறைந்திருக்கும் உருவச் சிலைகளை ஒதுக்கித் தள்ளவேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 14, புனித வியாழனன்று  திருப்பீடத்தில் தான் நிறைவேற்றிய திருஎண்ணை பூசுதல் திருப்பலியில், ஓர் அருள்பணியாளராக இருப்பது மிகப் பெரிய கொடை  என்றும் அதேவேளையில் அருள்பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்தவ விசுவாசிகளின் நன்மைக்காக அருள்பணித்துவம் முதன்மையான ஒரு அருள்கொடையாகவும் விளங்குகிறது என்றும் அவர்களுக்கு நினைவூட்டினார்.

அருள்பணியாளர்களின் பணிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய மூன்று "மறைந்துள்ள சிலைகள்" பற்றியும், தீயவன் இவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு மேய்ப்பர்களான நம்மை பலவீனப்படுத்தவும், சிறிது சிறிதாக, அன்பான மூவொரு இறைவனின் திருப்பிரசன்னத்திலிருந்து நம்மைப் பிரிக்கவும் செய்கிறான் என்பதைக் குறித்தும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதல் சோதனை, சிலுவை இல்லாமல் புகழை அல்லது வெற்றியை அடையவேண்டும் என்கின்ற நிலையை சாத்தான் நம்மில் தோற்றுவிக்கிறது. சிலுவை இல்லாமல் வெற்றி என்பது, சிலுவை மட்டும் தன்னைத் தாழ்த்திக்கொண்ட இயேசுவின் தியாகமிக்க சாவுக்கு முரணாக அமைகிறது. அதாவது, ஏழையாக வாழ்ந்த கிறிஸ்துவுடன் ஏழையாக வாழ்வது மற்றும் ஏழையாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பது ஆகிய அன்பின் மனநிலைக்கு எதிரானதாக அமைகின்றது. இதில் நம்முடைய சொந்த மகிமையைத் தேடும் உலக மனப்பான்மை இயேசுவின் பிரசன்னத்தைப் பறிக்கிறது.  

இரண்டாவது சோதனை, எண்களின் சிலையை உருவாக்குவதாகும், இது புள்ளிவிவரங்களில் வெறிகொண்ட அருள்பணியாளர்களில் காணப்படுகிறது. இருப்பினும், மக்களை வெறும் எண்ணிக்கையாக நோக்க முடியாது. கடவுளின் கொடைகளை இந்த அளவுகோலால் அளவிடவும் முடியாது. மேலும் இது கிறிஸ்துவின் திருஅவைக்கான ஒரே வழியாகவோ அல்லது அளவுகோலாகவோ இருக்க முடியாது. எண்கள் மீதான இந்த ஈர்ப்பில், நாம் உண்மையிலேயே நம்மைத் தேடுகிறோம், இந்தச் சிந்தனை முறையால் நமக்கு வழங்கப்படும் கட்டுப்பாட்டில் மகிழ்ச்சி அடைகிறோம். இதனால் தனிப்பட்ட நபர்களின் முகங்களைப் பற்றி கவலைப்படாமல், அன்பிலிருந்து நாம் வெகு தொலைவிற்குச் சென்றுவிடுகிறோம்.

இறுதியாக, மூன்றாவது வகையான உருவ வழிபாடு, இரண்டாவதுடன் தொடர்புடைய, ஒரு வகையான செயல்பாட்டுவாதமாகும், இது செயல்திறனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. "செயல்பாட்டு" அருள்பணியாளர்கள், தங்கள் சொந்த திட்டங்களின் செயல்திறனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளவர்களாக இருப்பார்கள். இது கவர்ச்சியாக இருக்கலாம்; பலர் சாலையைவிட சாலை வரைபடத்தில்தான் ஆர்வமாக உள்ளனர். இந்தச் செயல்பாட்டுவாதம் சிறிது சிறிதாக நமக்குள் இருக்கும் இறைத்தந்தையின் இருப்பை மாற்றி விடுகிறது. நமது தந்தையாம் இறைவன் படைப்பாளர். நம் தந்தையாக, மென்மையான அன்புடன், அவர் நம்மை உருவாக்குகிறார், தனது படைப்புகளைக் கவனித்துக் கொள்ளவும், ஆண்களையும் பெண்களையும் இன்னும் சுதந்திரமாக்குவதற்கும் அவர் தொடர்ந்து  உழைத்து வருகிறார். செயல்பாட்டுவாதத்தில், நம் வாழ்க்கையின் சிறிய மற்றும் பெரிய விடயங்களில் இறைத்தந்தையை வணங்குவதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய சொந்த வேலைத்திட்டங்களின் செயல்திறனில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆகவே, நம்மில் மறைந்துகிடக்கும் இச்சிலைகள் மற்றும் தன்னலத்தை அகற்றவும், உருவச் சிலைகளைப் பகுத்தறியும் பணியில் விடாமுயற்சிடன் இருக்கவும் தேவையான நிறைவான அருளை நேர்மையாளரான புனித யோசேப்பிடம் இறைஞ்சுவோம் என்று கூறி, தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2022, 13:15