திருத்தந்தை: துணிவோடிருங்கள், உயிர்ப்பின் மகிழ்வை அறிவியுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
"அஞ்சாதீர்கள்" என, உயிர்த்த ஆண்டவர் உரைத்த நம்பிக்கையூட்டுகின்ற மற்றும், அச்சம் தவிர்க்கின்ற வார்த்தைகளை நம் இதயங்களில் பதிப்போம் என்று திருப்பயணிகளை ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகிய, ஏப்ரல் 18, இத்திங்கள் நண்பகலில் வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மை நமக்கு விடுதலை அளிக்கும் என்பதற்குச் சாட்சிகளாக, இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அன்று விடியற்காலையில், இயேசுவின் கல்லறையைப் பார்க்கச் சென்ற பெண்கள், அவர் உயிர்த்துவிட்ட செய்தியை சீடர்களுக்கு அறிவிக்க ஓடியபோது, உயிர்த்த இயேசு அவர்களை எதிர்கொண்டு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்" (காண்க.மத்.28:8-15) எனக் கூறியதை விளக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, இவ்வுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
"அஞ்சாதீர்கள்"
மரணம், நோய், வாழ்வின் இன்னல்கள் போன்ற எதுவானாலும், அவை குறித்த அச்சம் எவ்வாறு நம்மை முடக்கிப்போடும் என்பதை, "அஞ்சாதீர்கள்" என்ற ஆறுதலளிக்கும் சொல்லாடல் ஏற்க வைக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, மரணத்தை வென்ற இயேசுவைத் தவிர, வேறு யாரால், இத்தகைய நம்பிக்கையளிக்கின்ற சொல்லாடலை நம்மிடம் கூறமுடியும் என்ற கேள்வியை எழுப்பினார்.
அச்சம், எவ்வாறு இதயக் கதவுக்குள் நம்மை எப்போதும் மறைத்து வைத்திருக்கின்றது என்பதை முழுவதும் அறிந்தவர்களாய், நம் அச்சங்கள் என்ற கல்லறையிலிருந்து வெளிவர ஆண்டவர் அழைக்கிறார் எனவும், அதேநேரம், அவர் என்றென்றும் நம்முடனிருக்கிறார் என்பதை அனுபவிக்க நம்மை அனுமதிக்கவேண்டும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
விரைந்து செல்லுங்கள், மற்றவருக்கு அறிவியுங்கள்
“என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என, இயேசு அப்பெண்களிடம் கூறினார், நாமும் நம்மைச் சூழ்ந்துள்ள அச்சத்தை அகற்றி, ஆண்டவரின் உயிர்ப்பால் வரும் பெருமகிழ்ச்சியை, மற்றவருக்கு அறிவிப்பதற்கு அழைக்கப்படுகிறோம் என்று திருத்தந்தை கூறினார்.
சவால்கள், தடைகள்
நம் மனங்களைத் திறந்து நற்செய்தியை நம்மில் கொண்டிருந்தால், நம்மைவிட்டு அச்சம் அகலும் என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும், தடைகள் குறித்தும் குறிப்பிட்டார்.
“‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்’ எனப் பொய் சொல்வதற்கு, இயேசுவின் கல்லறையை காவல் காத்த படைவீரர்கள் மிகுதியாகப் பணம் பெற்றனர் என்று நற்செய்தியில் பதிவுசெய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாமும் இத்தகைய சவாலை எதிர்கொள்ளலாம், ஆயினும், பொய்யுரை மற்றும் இரட்டைவேடம் ஆகிய நம் கல்லறைகளிலிருந்து வெளிவரவேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என உரைத்தார்.
வெளிப்படைத்தன்மைக்கு நாம் சான்றுகளாய் வாழுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்றுரைத்து, தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுசெய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்