திருத்தந்தை, கனடாவின் மெட்டி பழங்குடியினர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
ஏப்ரல் 21, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, Manitoba Métis என்ற கனடாவின் பழங்குடியினத்தவர் கூட்டமைப்பின் 55 பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்ட வாழ்க்கையின் துயர அனுபவங்களைக் கேட்டறிந்து, அவர்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்காலத்தில், கனடாவில் அரசால் உருவாக்கப்பட்டு, கத்தோலிக்கரால் நடத்தப்பட்ட பழங்குடியினச் சிறார் தங்கிப் படித்த விடுதிகளில், அச்சிறார் எதிர்கொண்ட கடும் உரிமை மீறல்களுக்குப்பின்னர், அந்நாட்டுத் திருஅவையோடு ஒப்புரவுப் பாதையை மேற்கொண்டுவருவதன் ஒரு பகுதியாக, இப்பிரதிநிதிகள் உரோம் நகரத்திற்கு வந்து திருத்தந்தையைச் சந்தித்துள்ளனர்.
வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் Métis Manitoba கூட்டமைப்பினரைச் சந்தித்த திருத்தந்தை, அக்காலத்தில் கத்தோலிக்கரால் நடத்தப்பட்ட வெட்கத்துக்குரிய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டதோடு, நம்பிக்கை மற்றும், புதுப்பித்தல் நிறைந்த செய்தியையும் வழங்கினார்.
கனடாவில் Manitoba Métis குழுமம், தன்னாட்சி செய்பவர்களாக, தங்களின் உரிமைகள் மற்றும், தனித்துவத்தை உறுதிப்படுத்தி அவை பாதுகாக்கப்படுவதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனாலேயே, இவர்கள், இம்மாதத் துவக்கத்தில், திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்த, கனடாவின் மற்ற பழங்குடியினத்தவரோடு உரோம் நகருக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் இறுதியில், இப்பிரதிநிதிகள், 300 ஆண்டுகள் பழமையுடைய பாசிமணிகளைக்கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருள்களை திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினர். அதோடு, தங்களின் Métis இனத் தலைவர் Louis Riel அவர்களின் கல்லறையைத் தரிசித்து ஆசிர்வதிப்பதற்காக, கனடாவுக்கு வருமாறும், அவர்கள் திருத்தந்தைக்கு அழைப்புவிடுத்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்