திருஅவையின் மறைப்பணிக்கு பாப்பிறை அமைப்பின் ஆதரவிற்கு நன்றி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 28, இவ்வியாழனன்று பாப்பிறை அமைப்பின் நூறு பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் மறைப்பணிக்கு அவ்வமைப்பு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைக் கூறி அவர்களை வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்கு அவர்கள் ஆற்றிவரும் அர்ப்பணம் நிறைந்த அருமையான பணிகளைப் பாராட்டி தனது உரையைத் தொடங்கினார்.
பாப்பிறை அமைப்பு, உலகிலுள்ள சகோதரர் சகோதரிகள் பலரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்றும், குறிப்பாக, கல்வி, தொண்டு மற்றும் திருஅவைத் திட்டங்களுக்கான அவர்கள் பெறும் உதவியானது, ஒற்றுமை மற்றும் அமைதிக்கான கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதில் திருஅவையின் தொடர்ச்சியான முயற்சிகளை எளிதாக்க உதவுகிறது என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதேவேளையில், போர் மற்றும், தாக்குதல்களின் அழிவுகரமான விளைவுகளை இந்த நாள்களில் நாம் காணும்போது, அப்போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும், தங்கள் தாயகத்தைவிட்டு வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அவர்களின் தாராள மனம் மற்றும், அர்ப்பணிப்பிலிருந்து பயன்பெறும் அனைவருக்கும் நற்செய்தி எடுத்துக்காட்டும் அன்பு, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றைக் கொண்டுவர அவர்களின் பணி பெரிதும் உதவுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மேலான பணிகளுக்காகப் அவர்களை மனமுவந்து பாராட்டுவதாகவும் கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்