தேடுதல்

பாத்திமா அன்னை மரியா பவனி பாத்திமா அன்னை மரியா பவனி 

இரஷ்யா, உக்ரைன் அர்ப்பணிப்பில் ஆயர்கள் கலந்துகொள்ள அழைப்பு

இரஷ்யா மற்றும் உக்ரைனை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் உலகின் அனைத்து ஆயர்களும், தங்களின் அருள்பணியாளர்களோடு கலந்துகொள்ள திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இம்மாதம் 25ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரஷ்யாவையும் உக்ரைனையும் அன்னை மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு, உலகின் அனைத்துத் தலத்திருவைகளோடு ஒன்றித்து நடைபெறும் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

இரஷ்யா மற்றும் உக்ரைனை அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்து, அமைதிக்காகச் செபிக்கும் இந்நிகழ்வில் உலகின் அனைத்து ஆயர்களும், தங்களின் அருள்பணியாளர்களோடு கலந்துகொள்ளுமாறு திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார் என்றும் புரூனி அவர்கள் தெரிவித்தார்.

டுவிட்டர் செய்தி

நம் அகவாழ்வைப் புதுப்பிப்பதற்கும், அதைப் பேணி வளர்ப்பதற்கும், ஆண்டவரால் நமக்கு வழங்கப்பட்டுள்ள காலம், தவக்காலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 18, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

“கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய, இறைத்தந்தையிடமிருந்து நாம் பெறுகின்ற வெகுமதியை நோக்கிய பயணத்திற்கு, ஆண்டவரால் நமக்கு வழங்கப்பட்டுள்ள காலம், தவக்காலம் என்றும், தவக்காலம்” என்ற ஹாஷ்டாக்குடன் (#Lent) திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் அமைதி நிலவ

மேலும், உக்ரைனில் அமைதியைக் கொணர்வதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கு ஐரோப்பாவில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக்கொண்டுவரும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவது குறித்து, மார்ச் 16, இப்புதனன்று ஜெர்மன் நாட்டு சான்சிலர் Olaf Scholz அவர்களுடன், தொலைபேசி வழியாகக் கலந்துபேசினார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி

மார்ச் 16, இப்புதன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களுடன் காணொளி வழியாக உரையாடியபின்னர், இங்கிலாந்தின் ஆங்லிக்கன் கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும், முதுபெரும்தந்தை கிரில் அவர்களோடு, உக்ரைனில் அமைதியைக் கொணர்வதன் உடனடித் தேவை குறித்து கலந்துரையாடியுள்ளார்.  

போரும் வன்முறையும், பிரச்சனைகளுக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது என்று பேராயர் வெல்பி அவர்கள், முதுபெரும்தந்தை கிரில் அவர்களிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2022, 16:32