தேடுதல்

சீன விமான விபத்து மீட்புப் பணிகள் சீன விமான விபத்து மீட்புப் பணிகள்  

சீன விமான விபத்தில் இறந்தோருக்குத் திருத்தந்தை இரங்கல்

சீனாவில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் செப நெருக்கத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சீனாவில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 21, இத்திங்களன்று சீனாவின் குவாங்சியில் நடந்த நிகழ்த்த விமான விபத்தில் இறந்தோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரில் தந்தி செய்தி ஒன்றை, சீன அரசுத் தலைவருக்குக் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இந்த விபத்தில் இறந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு தனது நெருக்கத்தை வெளிப்படுத்துவதோடு அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் அத்தந்தி செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 21 திங்களன்று, 132 பேருடன் பயணித்த சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU5735 விமானம் குவாங்சி மாநிலத்தில் மலைப்பகுதி ஒன்றில் மோதி பெரும் விபதிக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர் என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனினும் இதுவரை உயிர்பிழைத்தோர் பற்றிய தகவல் ஏதும் இல்லை. மேலும், இவ்விமானம் சாதாரணமாகத் தரையிறங்குவதற்கு முன்பாக கீழே இறங்கத் தொடங்கும் நேரத்தில், பயண உயரத்திலிருந்து திடீர் சரிவு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2022, 15:22