ஆண்டவரின் இரக்கத்தை அன்புச் செயல்களால் அறிவியுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் லாஸ் ஆஞ்சலெஸ் நகரில், மார்ச் 18 இவ்வெள்ளி மாலையில் துவங்கியுள்ள சமயக் கல்வி குறித்த நான்கு நாள் மாநாட்டிற்கு, இஸ்பானிய மொழியில் காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்புக்களால் சமுதாயத்தில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஆண்டவர் மீது வைத்துள்ள நம்பிக்கை, அவரது இரக்கம், மற்றும் கனிவு ஆகியவற்றை வார்த்தைகளால் அல்ல, மாறாக, உண்மையான பிறரன்புச் செயல்களால் அறிவிக்கவேண்டும் என்று அவர் நமக்கு அழைப்புவிடுக்கிறார் என்று, திருத்தந்தை அக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டத்தின் சமயக் கல்வி பணிக்குழு ஏற்பாடு செய்துள்ள இந்த நான்கு நாள் மாநாடு, “நம்பிக்கையின் உயிருள்ள தண்ணீர்” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. மார்ச் 20 இஞ்ஞாயிறன்று நிறைவடையும் இம்மாநாடு, இவ்வுலகில் இத்தகைய தலைப்பில் நடைபெறும் மிகப்பெரிய ஆண்டுக் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசுவின் திருஇதயம்
உலகமனைத்திற்கும் இரக்கத்தின் ஊற்றாக உள்ள இயேசுவின் திருஇதயத்திலிருந்து புறப்படும் தண்ணீர் மற்றும் குருதியில் நம்மைத் தொடர்ந்து புதுப்பிப்பதற்கு, இம்மாநாட்டின் கருப்பொருள் அழைப்புவிடுக்கின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, உயிருள்ள தண்ணீரின்றி, நமது மறைப்பணி, ஆன்மீக அளவில் வேதனை நிறைந்ததாகவே மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சிலுவையே நம் நம்பிக்கை
சமுதாயத்தில் பிரிவு, பல உயிர்கள் இழப்பு மற்றும், சமுதாயத்தில் நெருக்கடி ஆகியவற்றை உருவாக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று, ஒருவர் ஒருவர் மீது தொடர்ந்து அக்கறை காட்டவும், ஆண்டவரின் பரிவன்பைத் தொடர்ந்து அறிவிக்கவும் அழைப்புவிடுக்கின்றது என்றும் திருத்தந்தை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னோக்கிச் செல்லும் திருஅவை
லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டத்தின் புனித கபிரியேல் மறைப்பணித்தளம், மெக்சிகோ மற்றும், கலிஃபோர்னியாவின் திருத்தூதரான புனித Junipero Serra அவர்களால் முதலில் உருவாக்கப்பட்டது, தற்போது அம்மறைப்பணித்தளம், தன் 250ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால், நீங்களே திருஅவை எனவும், அது துணிச்சல் மற்றும், படைப்பாற்றலோடு புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லவேண்டும் எனவும், அப்பணியில் நீங்கள் தனியாக இல்லை, மாறாக ஆண்டவர் உங்களோடு இருக்கின்றார் எனவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்