திருத்தந்தை: மன்னிப்பு, ஒரு மனித உரிமை
மேரி தெரேசா: வத்திக்கான்
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வருகிறவர்கள், அந்நேரத்தில் தாங்கள் கூறுவது, இறைத்தந்தை தம் பிள்ளைகளுக்கென்று வைத்துள்ள நம்பிக்கை, மற்றும், பிறரன்பு ஆகியவற்றோடு கேட்கப்படுவதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25, இவ்வெள்ளியன்று கூறினார்.
Apostolic Penitentiary எனப்படும் வத்திக்கானின் மனச்சான்று பேராயம், மார்ச் 21 இத்திங்கள் முதல், 25 இவ்வெள்ளிவரை நடத்திய 32வது பயிற்சியில் பங்குபெற்ற நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்களிடம் மன்னிப்பு குறித்து எடுத்துரைத்தார்.
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள், அதைப் பெற வருபவர்களை வரவேற்று, அவர்கள் கூறுவதற்குச் செவிசாய்த்து, அவர்களோடு பயணிக்கவேண்டும், இவ்வாறு உதவுவதால், உலகில் ஓர் ஆன்மீகச் சூழலியல் உருவாக உதவமுடியும் என்று திருத்தந்தை கூறினார்.
கடவுளின் மன்னிப்பைத் தாராளமாக வழங்குவதன் வழியாக மக்களையும், உலகையும் குணமாக்குவதிலும், ஒவ்வொரு மனித இதயமும் ஏங்கும் அன்பு மற்றும், அமைதியைக் கொணர்வதிலும், அதாவது உலகில் ஓர் ஆன்மீகச் சூழலியலை உருவாக்குவதிலும் அருள்பணியாளர்களாகிய நாம் ஒத்துழைப்பாளர்களாக இருக்க இயலும் எனவும் திருத்தந்தை கூறினார்.
புனிதத்துவத்திற்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்கள் எப்போதும் கருத்தில் கொண்டிருக்கவேண்டும் என்றும், அவ்வருளடையாளத்தைப் பெற வருபவர்கள், கடவுளின் திட்டத்தைப் புரிந்துகொள்ளவும், ஏற்கவும் உதவவேண்டும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இறைத்தந்தையால் அன்புகூரப்படும் பிள்ளைகளாக அனைவரும் உணரும்வகையில், அனைவருக்கும் மன்னிப்பு தேவைப்படுகிறது என்றுரைத்த திருத்தந்தை, அருளடையாளத்தை நிறைவேற்றுபவர் வழங்கும் ஆசிர், ஆன்மாவிற்கு மிகவும் வல்லமைமிக்க மருந்து மற்றும், அனைவரின் மனதிற்கும் மருந்து என்று தெரிவித்தார்.
2025ம் யூபிலி ஆண்டை மனச்சான்று பேராயத்திற்கு நினைவுபடுத்திய திருத்தந்தை, பாவத்திற்காக மனம் வருந்துதல், ஒவ்வொரு யூபிலிக்கும் மிக மையமாக அமைந்துள்ளது எனவும், கடவுளின் இரக்கம் அனைவரையும் சென்றடையும்வண்ணம் யூபிலி ஆண்டு பயனுள்ளதாக அமைய கவனமுடன் செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு தன் உரையை நிறைவுசெய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்