தேடுதல்

ஃபிராசிநெத்தியின் புனித டாரத்தி அருள்சகோதரிகள் சபைப் பிரதிநிதிகள் ஃபிராசிநெத்தியின் புனித டாரத்தி அருள்சகோதரிகள் சபைப் பிரதிநிதிகள் 

திருத்தந்தை: ஒன்றிணைந்து நடப்பது, துறவற வாழ்விற்கு முக்கியம்

திருஅவையில் துறவு சபைகள், ஒன்றிணைந்த பயணத்தின் மிகப்பெரும் மரபு மற்றும், வளமையான பாரம்பரியத்தின் களஞ்சியங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, மற்றும் மறைப்பணி ஆகியவை பற்றி, ஃபிராசிநெத்தியின் புனித டாரத்தி அருள்சகோதரிகள் சபைப் பிரதிநிதிகளிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மார்ச் 18, இவ்வெள்ளி நண்பகலில் திருப்பீடத்தில் தன்னைச் சந்திக்க வந்திருந்த ஃபிராசிநெத்தியின் புனித டாரத்தி அருள்சகோதரிகள் சபைப் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்கின்ற நிறுவனங்கள், ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளும் திருஅவையின் மிகப்பெரும் மரபின் வளமையான களஞ்சியங்களாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவோடும், தூய ஆவியாரோடும் ஒன்றிணைந்து நடப்பது, கிறிஸ்தவத் துறவின் தனிச்சிறப்பு என்றும், இதனை உடன்பிறப்பு உணர்வுகொண்ட பங்கேற்பிலிருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் கூறியத் திருத்தந்தை, அதேநேரம், ஒருவர் தன்னை குறுகிய வட்டத்துக்குள் முடக்கிவிடாமலும், தன்னல ஆதாயத்தால் வழிநடத்தப்பட அனுமதிக்காமலும் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, மற்றும் மறைப்பணி

புனித டாரத்தி அருள்சகோதரிகள் சபையைத் தொடங்கிய, புனித பவுலா ஃபிராசிநெத்தி அவர்களிடமிருந்து ஒருங்கிணைப்பைக் கற்றுக்கொள்ளலாம் என்றும், இப்புனிதர், இயேசுவோடு இருந்த பன்னிரு திருத்தூதர்களின் ஒன்றிப்பால் ஈர்க்கப்பட்டவர் என்றும் உரைத்த திருத்தந்தை, இப்புனிதர் காட்டுகின்ற பங்கேற்பின் பாதை பற்றியும் எடுத்துரைத்தார். புனிதர் பவுலா ஃபிராசிநெத்தி அவர்கள் பங்கேற்பின் பாதையை நமக்குக் காட்டி, நற்செய்தி அறிவிப்புப்பணி வழியாக, கல்விகற்றல் மற்றும் கற்றுக்கொடுத்தல் பாதையில் நடந்துள்ளார் என்றும், பள்ளிக்கூடமே சென்றிராத இப்புனிதர், கல்விக்குத் தன்னையே அர்ப்பணிக்கும் துறவு சபை ஒன்றை திருஅவைக்குத் தந்துள்ளார் என்றும் திருத்தந்தை பெருமிதத்தோடு கூறினார்.

பக்குவமான மனிதர்களை உருவாக்குவது, எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு அதிகமாகத் தேவைப்படுகிறது எனவும், இன்றையக் கலாச்சார, மற்றும் சமுதாயச் சூழலில் புதிய கல்வி ஒப்பந்தம் ஒன்று தேவைப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இச்சபை சகோதரிகள், புதிய தலைமுறைகளை உருவாக்குவதில் உயிர்த்துடிப்புடன் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2022, 16:44