திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

உக்ரைன் சிறாருக்காக திருத்தந்தை இறைவேண்டல்

உங்களுக்கு வருங்காலம் ஒன்று உள்ளது, அமைதியான ஒரு சமுதாயத்தில் வாழ்கிறீர்கள், ஆனால், உக்ரைன் சிறார், குண்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக கடுங்குளிருக்கு மத்தியில் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் - மிலான் பள்ளி மாணவர்களிடம் திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான்

மார்ச் 16, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், மிலான் நகரின் தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றின் ஏறத்தாழ இரண்டாயிரம் இளையோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மாணவர்களோடு சேர்ந்து உக்ரைன் நாட்டுச் சிறாருக்காகச் செபித்தார்.

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு புதன் பொதுமறைக்கல்வி வழங்குவதற்குமுன்னர், மிலான் நகரின்  “La Zolla“ பள்ளியின் இளையோரைச் சந்தித்த திருத்தந்தை, உக்ரைன் நாட்டை, போர் தொடர்ந்து அழித்துவரும்வேளை, குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் உக்ரைன் நாட்டுச் சிறாருக்காகச் செபித்தார்.

ஆண்டவராகிய இயேசுவே, வயதுவந்தோரின் ஆணவத்திற்குப் பலியாகும் உக்ரைன் நாட்டுச் சிறாரை கண்ணோக்கும், அவர்களை ஆசிர்வதித்தருளும், மற்றும், பாதுகாத்தருளும் என்று செபித்த திருத்தந்தை, போரை எதிர்கொள்கின்ற, அதனால் துயருறுகின்ற மற்றும், சாப்பிட உணவின்றி, கட்டாயமாகத் தங்கள் வீடுகள், உடைமைகள் என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறுகின்ற சிறுவர் சிறுமியரை நினைத்துப் பாருங்கள் என்று, “La Zolla“ பள்ளியின் இளையோரிடம் கூறினார்.

உங்களுக்கு வருங்காலம் ஒன்று உள்ளது, அமைதியான ஒரு சமுதாயத்தில் வாழ்கிறீர்கள், ஆனால், உக்ரைன் சிறார், குண்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக கடுங்குளிருக்கு மத்தியில் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் எனவும், மிலான் பள்ளி மாணவர்களிடம் திருத்தந்தை கூறினார்.

மேலும், மார்ச் 16, இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரே போருக்காக எங்களை மன்னியும் என்ற தலைப்பில், நேப்பிள்ஸ் பேராயர் Domenico Battaglia அவர்கள் எழுதிய இறைவேண்டலோடு தனது கருத்தையும் இணைத்துச் செபிப்பதாகக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2022, 13:33