தேடுதல்

1622ம் ஆண்டு மார்ச் 12ல் புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் 1622ம் ஆண்டு மார்ச் 12ல் புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள்  

மார்ச் 12ல், உரோம் இயேசு ஆலயத்தில் திருத்தந்தை திருப்பலி

புனிதர்கள் இலெயோலா இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியார், அவிலா தெரஸ், இசிதோர், பிலிப் நேரி ஆகிய ஐவரும், ஒரே நாளில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனிதர்கள் இலெயோலா இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியார், அவிலா தெரஸ், இசிதோர், பிலிப் நேரி ஆகிய ஐவரும், புனிதர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் நானூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 12, இச்சனிக்கிழமை மாலையில் திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, உரோம் நகரிலுள்ள இயேசு சபையினரின் இயேசு ஆலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1622ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதியன்று, இந்த ஐந்து புனிதர்களும் திருத்தந்தை 15ம் கிரகரி அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

புனித இலெயோலா இஞ்ஞாசியார், இயேசு சபையை நிறுவியவர். புனித அவிலா தெரஸ், கார்மேல் சபையை சீர்திருத்தம் செய்தவர். உரோமை நகரின் திருத்தூதர்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட புனித பிலிப் நேரி, மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்காக "இறைவேண்டல் சபையை" (Congregation of the Oratory) ஏற்படுத்தியவர். மத்ரித் நகரின் இசிதோர், பக்தியுள்ள ஒரு விவசாயி ஆவார். இவர், விவசாயிகள், தினக்கூலிகள், கிராமப்புற குழுமங்கள் ஆகியவற்றின் பாதுகாவலர்.

புனித இலெயோலா இஞ்ஞாசியார் இறைபதம் சேர்ந்த 66 ஆண்டுகளுக்குப் பிறகும், புனித பிரான்சிஸ் சவேரியார் இறைபதம் சேர்ந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இவ்விருவரும் ஒரே நாளில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். 1540ம் ஆண்டில் உரோம் நகரில் புனிதர்கள் இலெயோலா இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியார் ஆகிய இருவரும் சந்தித்தபிறகு, இறுதிவரை அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கவே இல்லை. ஆயினும் அவர்களுக்கு இடையே நிலவிய அன்பு மிக உறுதியாக இருந்தது என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2022, 15:01