தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை - முதியோரின் விசுவாச அனுபவப் பகிர்வு

விசுவாசத்தில் இறைவனோடு நாம் கொண்டிருக்கும் வாழ்வு அனுபவத்தை ஒருவருக்கொருவர் பகிர்வதற்கு இணையாக வேறெதுவும் இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

முதுமையின் அர்த்தம், மற்றும் மதிப்பு குறித்து புதன் மறைக்கல்வியுரைகளில் தன் கருத்துக்களை பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், வத்திக்கானில் புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, 'விடைபெறுதலும் மரபு வழிப்பெறுதலும் : நினைவுகளும் சான்றுகளும்' என்ற தலைப்பில், புதிய தலைமுறைக்கு முதியோர் எவ்வாறு தங்கள் தனிப்பட்ட விசுவாச அனுபவங்களை வழங்குகின்றனர் என்பது குறித்து தன் உரையை வழங்கினார். முதலில், இணைச்சட்டம் நூலின் 34ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால், நீ அங்கு போகமாட்டாய்’. எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை. நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார் (இணைச்சட்டம் 34,4-5.7.9).

அதன் பின்னர் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுத் தொடர்ந்தது.

அன்புச் சகோதரகளே, சகோதரிகளே, இன்று நாம் வாசித்த விவிலியப்பகுதியில், முதிய வயதில் இறக்கும் தருவாயில் இருந்த மோசே, ஆண்டவரில் தான் கொண்டிருக்கும் விசுவாச அனுபவத்தை தலைமுறையூடே வழங்குவதைக் காண்கிறோம். தன் அனைத்து வாக்குறுதிகளுக்கும் விசுவாசமாக இருந்த இறைவன் மீது மோசே கொண்டிருந்த விசுவாச அனுபவத்தின் பகிர்வு இது. இணைச்சட்ட நூல் கூறும் மோசேயின் பாடலை நாம் பார்க்கும்போது, இறைவனோடு இணைந்து வாழ்ந்த வரலாற்றின் நினைவுகளையும், ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு ஆகியோர் கடவுளின் மீது கொண்ட விசுவாசத்தால் உருவான மக்கள் கூட்டம் நிகழ்த்திய வல்லச் செயல்கள் குறித்தும் பார்க்கிறோம். மோசே இங்குக் கடவுளின் கசப்புணர்வுகளையும், தன் மக்கள்மீது அவர் கொண்டிருந்த ஏமாற்றங்களையும் நினைவுகூர்கிறார். நூற்றிருபது ஆண்டுகள் வாழ்ந்த மோசே, மிகத்தெளிவாக இருந்து, தன் வாழ்வு மற்றும் விசுவாச அனுபவத்தை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கிறார். இன்றையக் காலக்கட்டத்தில், திருஅவையின் நற்செய்தி அறிவிப்பு முயற்சிகள், புத்தகங்கள், திரைப்படங்கள், மற்றும் ஏனைய தொடர்பு சாதனங்கள் வழி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், விசுவாசத்தில் இறைவனோடு நாம் கொண்டிருக்கும் வாழ்வு அனுபவத்தை ஒருவருக்கொருவர் பகிர்வதற்கு இணையாக வேறெதுவும் இல்லை. தன் வரலாற்றிற்குத் தெளிவான சான்றாக இருக்கும் ஒரு முதியவர், வேறு எதனோடும் ஒப்பிடமுடியாத ஓர் ஆசீராகும். என் தாத்தாவிடம் இருந்து நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொண்டேன். 1941ம் ஆண்டு Piave நகரில் அவர் போர் வீரராக செயல்பட்டது குறித்த அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துள்ளார். ஆனால் இன்று, பெற்றோரின் பெற்றோர், முதிய வயதில், ஒதுக்கி வைக்கப்படும் ஒரு பொருளாக உள்ளனர். அவர்களின் அனுபவப் புதையலைப் பகிர இளையோர் முன்வர வேண்டும்.

கடவுளின் வார்த்தைக்கு விசுவாசமாக இருக்கவும், எத்தகைய துன்ப வேளையிலும் நம்பிக்கையுடன் செயல்படவும், அனைத்து நம் சகோதரர் சகோதரிகளுக்கும் அன்பு காட்டவும், முதியோரின் ஞானமும் அனுபவங்களும் நமக்குத் தேவைப்படுகின்றன. செவிமடுப்பதன் வழியாகவும், அனுபவங்களைக் காண்பதன் வழியாகவும் திருஅவைக் குறித்த அறிவைப் பெற்றுக்கொள்ளும் முறை இன்று காணப்படுவதில்லை. குழந்தைகள் இறைவனின் வார்த்தையை மறைக்கல்வி வகுப்புகளிலும், திருஅவைக் குறித்து கல்வி நிலையங்களிலும், சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கற்றுக்கொள்கிறார்கள். நற்செய்தியை நாம் படிக்கும்போது, எத்தனை உண்மைத்தன்மையுடன் இயேசுவின் வாழ்வு சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம், அங்குத் தவறுகள் மறைக்கப்படவில்லை. கடவுளின் ஆசீரையும், நம் தவறுகள், தோல்விகள் குறித்த வரலாற்றையும் ஏற்றுக்கொள்ள முதியோரின் அனுபவப் பகிர்வு நமக்கு உதவட்டும். தலைமுறை தலைமுறை வழியாக முதியோர் பகிர்ந்து வரும் அனுபவத்தை மதித்துப் பலன்பெறுவோம்.

இவ்வாறு தன் புதன் பொதுமறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2022, 12:37

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >