தேடுதல்

நம்மைத் தூண்ட உதவும் இறைவனின் ஒளி நமக்குத் தேவைப்படுகின்றது

திருத்தந்தை : இந்த தவக்காலத்தில் நாம் விழிப்புடன் செயல்படவேண்டிய தேவை உள்ளது என்பதை உணர்ந்து அதற்குத் தேவைப்படும் இறை அருளுக்காக இறைவனை வேண்டுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இயேசுவின் தோற்ற மாற்றத்தை நேரடியாகக் கண்ட சீடர்களைப்போல், நாமும், இறைவேண்டல் செய்யவும், மற்றவர்களுக்கு சேவை புரியவும் இருக்கும் பேரார்வத்தைத் தூண்ட உதவும் இறைவனின் ஒளி நமக்குத் தேவைப்படுகின்றது என, மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 13 ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகத்தை மேற்கோள்காட்டி, இயேசு செபித்துக்கொண்டிருந்தபோது தூக்கத்தால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோர் விழித்துப் பார்த்தபோது ஆண்டவரின் மகிமையைக் கண்டனர் என்று விளக்கினார்.

இயேசு தோற்றம் மாறி மோசேயுடனும், எலியாவுடனும் உரையாடியதைக் காண்பதற்கு முன்னர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சீடர்கள், கெத்சமெனி தோட்டத்த்தில் இயேசு செபித்துக்கொண்டிருந்தபோதும் தூக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்விலும், விழிப்புடன் இருக்கவேண்டிய நேரங்களில், நாம் களைப்பினால் தூங்கிவிடுவது இடம்பெறுவதுண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இந்த தவக்காலத்தில், நாம் விழிப்புடன் செயல்படவேண்டிய தேவை உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு தேவைப்படும் இறை அருளுக்காக நாம் இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்வோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்து, தூங்கிக்கொண்டிருந்த சீடர்கள் இயேசுவின் தோற்ற ஒளியால் விழித்தெழுந்து ஆண்டவரின் மகிமையைக் கண்டதுபோல், நாமும் உடல் சோர்வுகளிலிருந்து வெளிவந்து இறைவேண்டல் புரியவும், சேவையாற்றவும் தேவையாகவுள்ள இறையாவியின் வல்லமையை வேண்டுவோம் என எடுத்துரைத்தார்.

நம்மை தூண்டியெழுப்புவதற்கும், செபிப்பதற்கும், நமக்குள்ளேயே உற்றுநோக்கவும், பிறர்க்கென நம்மை அர்ப்பணிக்கவும் தேவையான பேரார்வத்தைத் தூண்டி நம்மை தட்டியெழுப்பும் வகையில் வித்தியாசமான முறையில் உலகைப் பார்க்க உதவும் இறைஒளிக்காக அவரை நோக்கி மன்றாடுவோம் எனவும், மூவேளை செப உரையின்போது நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் இதயங்கள் தட்டியெழுப்பப்படவும், கடவுளின் வழிகாட்டுதலையும், தூண்டுதலையும் பெறவும், நற்செய்தி வாசிப்பையும், இறைவனின் பாடுகள் குறித்த தியானிப்பையும், அவரின் எல்லையற்ற அன்பு குறித்த சிந்தனைகளையும் கைக்கொள்வோம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2022, 12:41

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >