உக்ரைனிலிருந்து புலம்பெயர்வோரை திறந்தமனதோடு வரவேற்க..
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு திருத்தந்தைக்கு ஆலோசனைகூறும் C-9 கர்தினால்கள் அவை, பிப்ரவரி 21, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கூட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது.
மேலும், அவநம்பிக்கை மற்றும், புகார் கூறும் மனநிலைகளைக் கொண்டிருப்போர் கிறிஸ்தவர் என்று கூற முடியாது என்றும், கிறிஸ்தவர்களாகிய நாம் தாழ்த்தப்பட்டவர்களாக அல்ல, மாறாக, விண்ணை நோக்கவேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 21, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இவ்வாறு தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, உக்ரைன் நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்துவருவது குறித்த கவலையை வெளியிட்டு, அப்பகுதியில் ஆக்ரமிப்பு பேரச்சம் நீங்கவும் அழைப்பு விடுத்து வருகிறார்.
உக்ரைன் நாடு குறித்து கவலை
மேலும், உக்ரைன் நாட்டின் டொன்பாஸ் தென்கிழக்கு மாநிலத்தில் பாலர் பள்ளி ஒன்றில் குண்டு விழுந்துள்ளது உட்பட, அந்நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்துவருவது குறித்து கவலையை வெளியிட்டு, பிப்ரவரி 21, இத்திங்களன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், போலந்து நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanisław Gądecki .
உக்ரைன் நாட்டின் மீது இராணுவத் தாக்குதல்கள் மேலும் இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவும்வேளை, அந்நாட்டிலிருந்து புலம்பெயரும் மக்களை, திறந்த இதயத்தோடு வரவேற்கவேண்டும் என்று, பேராயர் Gądecki அவர்கள், போலந்து மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அமைதி மற்றும், பாதுகாப்பில் வாழ்வதற்கும், தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பான வாழ்வை உறுதிசெய்வதற்குரிய வழிகளைத் தேடுவதற்கும் அனைவரும் உரிமையைக் கொண்டுள்ளனர் என்றும், போஸ்னான் பேராயர் Gądecki அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து, இரஷ்யா மற்றும், உக்ரைன் நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 3 கோடியே 80 இலட்சம் மக்கள் வாழ்கின்ற போலந்தில், இருபது இலட்சம் உக்ரைன் நாட்டவர் வாழ்கின்றனர், மற்றும் பணியாற்றுகின்றனர்.
மேலும், உக்ரைன் நாட்டை இரஷ்யா ஆக்ரமிப்பு செய்யும் என்ற அச்சம் உள்ளவேளை, உக்ரைனின் 4 கோடியே 40 இலட்சம் மக்களில், பத்து இலட்சம் பேர் போலந்தில் புகலிடம் தேடக் கூடும் என்று, போலந்து அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். (CNA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்