மியான்மாரில் அமைதி நிலவ திருத்தந்தையின் இறைவேண்டல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 1, செவ்வாயன்று, மியான்மர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் முதலாம் ஆண்டு நிறைவை நினைவு கூறப்படும் நிலையில், மீண்டும் அந்தத் துன்புறுத்தப்பட்ட மக்களுக்காகத் தனது இறைவேண்டலைப் புதுப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 2, புதனன்று தனது மறைக்கல்வி உரைக்குப் பின்பு இதுகுறித்து பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மாரில் இரத்தம் சிந்தும் வன்முறையை உலகம் வேதனையுடன் கண்டு வருகிறது என்றும், ஆர்வமுள்ள தரப்பினரிடையே நல்லிணக்கத்தை நோக்கி செயல்படுமாறும் அனைத்துலகச் சமூகத்தை வலியுறுத்தும் மியான்மர் ஆயர்களின் வேண்டுகோளில் தானும் இணைவதாகவும் தெரிவித்துள்ளார்.
துன்புற்றுக்கொண்டிருக்கும் பல சகோதர சகோதரிகளின் நிலையை உலகம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் அந்த வேதனைக்குள்ளான மக்களுக்கு ஆறுதல் அளித்திட தான் இறைவேண்டல் செய்வதாகவும், மேலும், அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் கடவுளிடம் ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளார்.
மியான்மாரின் இராணுவப் படைகளான டாட்மடாவ் (Tatmadaw), ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை பிப்ரவரி 1, 2021 அன்று அகற்றிவிட்டு, மூத்த ஜெனரல் Min Aung Hlaing தலைமையிலான ஆட்சிக்குழு ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்ட எதிர்ப்பாளர்கள், மற்றும் கிளர்ச்சிப் போராளிகள்மேல் ஈவு இரக்கமின்றி ஒடுக்குமுறைகளைக் கையாண்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது இராணுவம்.
புள்ளிவிபரங்கள்படி, இதுவரை 1,500க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் ஏறத்தாழ 12,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்