இஸ்பானிய மீனவர்கள் உயிரிழப்புக்கு திருத்தந்தை இரங்கல்
மேரி தெரேசா: வத்திக்கான்
கனடாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இஸ்பானிய மீனவர் கப்பல் ஒன்று நீரில் மூழ்கியதில் பலர் உயிரிழந்ததற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அவர்களின் இறப்பால் வருந்தும் அனைவரோடும் தனது தோழமையுணர்வையும் தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
சந்தியாகோ தெ கொம்பாஸ்தெல்லா பேராயர் ஜூலியன் பாரியோ பாரியோ அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், திருத்தந்தையின் இறைவேண்டல்களும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா நிறையமைதி அடைவதற்கு, கடவுளின் இரக்கத்தை மன்றாடுவதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குத் தனது அருகாமையைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை கூறியதாக, அத்தந்திச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
24 மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற Villa de Pitanxo என்ற மீன்பிடி கப்பல், கனடாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில், ஏறத்தாழ 250 கடல் மைல்களுக்கு அப்பால், பிப்ரவரி 14, இத்திங்கள் இரவில் நீரில் மூழ்கியதில், பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 12 பேர் காணாமல் போயுள்ளனர் என்று கனடாவின் மீட்புக் குழு ஒருங்கிணைப்பு மையம் (JRCC) அறிவித்துள்ளது.
50 மீட்டர் நீளம் கொண்ட இந்த மீன்பிடிக் கப்பலில் பணியிலிருந்த 24 மீனவர்களில், 16 பேர் இஸ்பெயின் நாட்டையும், 5 பேர் பெரு நாட்டையும், 3 பேர் கானா நாட்டையும் சேர்ந்தவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்