திருத்தந்தையின் “Moto Proprio” அப்போதலிக்க அறிக்கை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் உள்கட்டமைப்பிற்குள் இரு தனிவேறு செயலகங்களை உருவாக்கும் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சுய விருப்பத்தின்பேரில் என்றழைக்கப்படும் “Moto Proprio” என்ற அப்போதலிக்க அறிக்கையின் வழி, பிப்ரவரி 14, திங்களன்று இதனை வெளியிட்டுள்ள திருத்தந்தை, விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பேராயத்தில் விசுவாசக் கோட்பாடுகளுக்கென்று ஒரு செயலகமும், ஒழுக்க ரீதியான நன்னெறி தகுதியுடைமைகளுக்கென்று ஒரு செயலகமும் உருவாக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் தனிச்செயலர் நியமிக்கப்படுவார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை வாழ்வில் கடைபிடிக்கப்படும் முக்கிய நோக்கமும் பணியும் ‘விசுவாசத்தைக் காத்துக்கொள்வதில்’(2திமோ 4:7) என்ற வார்த்தைகளுடன் FIdem Servare என்ற இந்த அப்போஸ்தலிக்க அறிக்கையை துவங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித திருத்தந்தை ஆறாம் பவுலால் உருவாக்கப்பட்ட இப்பேராயத்தின் தற்போதய உள்கட்டமைப்பு குறித்தும், புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் குறித்துக் காட்டப்பட்ட இதன் தகுதியுடமைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
விசுவாசம், மற்றும் ஒழுக்கநெறி தொடர்புடைய கோட்பாடுகளைப் பாதுகாப்பதும், நற்செய்தி அறிவித்தல் வழி விசுவாசத்தைப் பரப்புவதற்கு உதவும் ஆய்வுகளை ஊக்குவிப்பதும், சமுதாய மற்றும் அறிவியல் வளர்ச்சியின் முன்னிலையில் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுவதும், விசுவாசக் கோட்பாட்டுச் செயலகத்தின் முக்கியப் பணிகளாக இருக்கும் எனக் கூறும் திருத்தந்தை, திருமணம் தொடர்புடைய அலுவலகமும் இந்தச் செயலத்தின் கீழேயே வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
நன்னெறி தகுதியுடமைகளை உள்ளடக்கிய செயலகம் என்பது, விசுவாசக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செல்லும் குற்றங்களை விசாரிப்பதையும், நீதியை நிலைநாட்டுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இவ்விரு செயலகங்களும் இரு செயலர்களுடன் ஒரே தலைவரின் கீழ் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்