வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் உக்ரைன் நாட்டுக் கொடிகளுடன் மக்கள் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் உக்ரைன் நாட்டுக் கொடிகளுடன் மக்கள் 

போரை நடத்துபவர்கள், மனிதகுலம் குறித்து அக்கறையற்றவர்கள்

போரின் பாதை மேற்கொள்ளப்படக் கூடாது என இறைவனை மன்றாடிவரும் நாம், போர் வேண்டாம் என குரல்கொடுப்பதை நிறுத்திவிடாமல் உருக்கமாக மன்றாடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

போரை நடத்துபவர்கள் அனைவரும், மனிதகுலம் குறித்து சிறிதும் அக்கறையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழிவுதரும் ஆயுதங்களைக் கைக்கொள்வது என்பது, இறைவிருப்பத்திற்கு எதிரானது என உரைத்தார்.

உக்ரைனில் இடம்பெறும் இரஷ்ய தாக்குதல் குறித்து, பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 2ம் தேதி, திருநீற்றுப் புதனன்று திருஅவையில் உக்ரைன் நாட்டின் அமைதிக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பு நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளதை மீண்டும் நினைவூட்டினார்.

உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலால் அவதியுறும் மக்களுக்காகவும், போரிலிருந்து தப்பிக்க வெளியேறும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காகவும், உக்ரைனிலும் உலகின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களை முடிவுக்குக்கொணரும் அரசியல் தீர்மானங்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைனில் துன்புறும் நம் சகோதரர் சகோதரிகளுடன் நம் நெருக்கத்தை வெளியிடும் நாளாக, திருநீற்றுப் புதனைச் சிறப்பிப்போம் என்ற அழைப்பை அனைத்து விசுவாசிகளுக்கும் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரின் பாதை மேற்கொள்ளப்படக் கூடாது என்று, மீண்டும் மீண்டும் இறைவனை மன்றாடி வரும் நாம், போர் வேண்டாம் என்று குரல்கொடுப்பதை நிறுத்திவிடாமல், கடவுளிடம் மிக உருக்கமாக மன்றாடுவோம் என கேட்டுக்கொண்டார்.

போரைத் தொடங்கி நடத்துபவர்கள், மக்களின் உண்மையான வாழ்வு மீது அக்கறை காட்டுவதில்லை, மாறாக, அவர்கள், அனைத்திற்கும் மேலாக, கட்சிநலன்கள் மற்றும், அதிகாரத்தை முன்னிலைப்படுத்துபவர்களாக இருப்பதால், உண்மையாகவே, எல்லாப் போர்களிலும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாள்களில் புகலிடம் தேடுகின்ற வயதுமுதிர்ந்தோர், தங்கள் பிள்ளைகளுடன் நாட்டைவிட்டு வெளியேறும் அன்னையர் போன்ற, நம் சகோதரர், சகோதரிகளுக்கு  மனிதாபிமானக் கதவுகள் திறந்துவிடப்பட்டு, அவர்கள் வரவேற்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் மற்றும், உலகெங்கும் இடம்பெற்றுவரும் போர்கள் குறித்த மிகுந்த மனவேதனையை வெளியிட்டு, வன்முறையைப் பயன்படுத்துவோருடன் அல்ல, மாறாக, அமைதியை ஏற்படுத்துவோருடன் கடவுள் இருக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, உக்ரைன் மற்றும், உலகின் அமைதிக்காகவும், ஏமன், சிரியா, எத்தியோப்பியா போன்று, உலகின் பல்வேறு பகுதிகளில் போரினால் துன்புறும் மக்களுக்காகவும் செபிக்குமாறு அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2022, 13:00