திருத்தந்தை, சாம்பியா அரசுத்தலைவர் Hichilema சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
சாம்பியா நாட்டு அரசுத்தலைவர் Hakainde Hichilema அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 19, இச்சனிக்கிழமை காலையில், ஏறத்தாழ நாற்பது நிமிடங்கள், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடி பொதுச் செயலர் பேரருள்திரு Mirosław Wachowski அவர்களையும் சந்தித்தார், சாம்பியா அரசுத்தலைவர் Hichilema.
சாம்பியாவிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகளும், கத்தோலிக்கத் திருஅவை அந்நாட்டிற்கு ஆற்றிவரும் பணிகளும் திருப்திகரமாக உள்ளதாக, இச்சந்திப்புக்களில் கூறப்பட்டன.
கோவிட்-19 தடுப்பூசி உலக அளவில் கிடைப்பது, கோவிட் நோயாளிகள் நலமடைவது, திருப்பீடத்திற்கும் சாம்பியா நாட்டிற்கும் இடையே மதிப்புமிக்க ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, சாம்பியா பகுதி, மற்றும், பன்னாட்டு அளவில் இடம்பெறும் விவகாரங்கள் போன்றவை குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.
மேலும், 2022ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி உட்பட, தான் வெளியிட்ட பல ஏடுகளையும், "நோவா வழியாக, படைப்பிற்கும், அனைத்து மனிதருக்கும் கடவுள் மீட்பின் பாதை ஒன்றைத் திறக்கிறார்" என்று பொறிக்கப்பட்ட, நோவா பலவண்ண உருவப்படத்தையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாம்பிய அரசுத்தலைவர் Hichilema அவர்களுக்குப் பரிசாக அளித்தார்.
அரசுத்தலைவர் Hichilema அவர்களும், சாம்பியா நாட்டிற்கேயுரிய இரு இசைக் கருவிகளை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். அவற்றில் ஒன்று மரத்தாலும், மற்றொன்று செம்பு கனிமத்தாலும் ஆனவை.
ஆப்ரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதியிலுள்ள சாம்பியா நாட்டிற்கு, வடக்கே காங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே டான்சானியா, கிழக்கே மலாவி, மேற்கே மொசாம்பிக், சிம்பாப்வே, போட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடு முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்தில் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்