தேடுதல்

மறைக்கல்வியுரை: திருஅவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு

"அகில உலகத் திருஅவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு" என்ற பட்டம் அருளாளர் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித யோசேப்பு குறித்த ஒரு மறைக்கல்வித் தொடரை, கடந்த பல வாரங்களாகப் புதன்கிழமைகளில் வழங்கி வரும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் 12ம் தொடரை, பிப்ரவரி 16, புதன்கிழமையன்று, "அகில உலகத் திருஅவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு" என்ற தலைப்பில், வத்திக்கான் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கினார். முதலில் மத்தேயு நற்செய்தி 2ம் பிரிவிலிருந்து, எகிப்துக்கு குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு செல்லும்படி, ஆண்டவருடைய தூதர் கனவில் தோன்றி யோசேப்புக்கு கட்டளையிட்டதைப் பற்றிய பகுதி வாசிக்கப்பட்டது.

அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. (மத், 2 :13-15)

 பின்னர், திருத்தந்தையின் மறைக்கல்விச் சிந்தனைப் பகிர்வு தொடங்கியது.

அன்புச் சகோதரர் சகோதரிகளே, "அகில உலகத் திருஅவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு" என்ற சிந்தனைப் பகிர்வுடன், நம் யோசேப்புக் குறித்த சிந்தனைப் பகிர்வு நிறைவு பெறுகின்றது. விவிலியச் சான்றுகளின் அடிப்படையில், "அகில உலகத் திருஅவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு" என்ற பட்டம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களால் வழங்கப்பட்டது. நற்செய்தியில் தொடர்ந்து அன்னை மரியா, மற்றும்  இயேசுவின் பாதுகாவலராகவே புனித யோசேப்பு காட்டப்படுகிறார். திருக்குடும்பத்தை அவர் எப்படிப் பாதுகாத்தாரோ, அதுபோல்தான் திருஅவையையும் அவர் தொடர்ந்து காத்து வருகிறார். திருஅவையோடு இணைந்து ஏழைகள், நோயுற்றோர், இறக்கும் தறுவாயில் இருக்கும் அனைவரையும் அவர் பாதுகாக்கிறார். ஏனெனில், இவர்களைத்தான் இயேசுவும், 'சின்னஞ் சிறிய என் சகோதரர்கள்' என அழைத்தார். புனித யோசேப்பும் இதைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறார். அதாவது, திருஅவையையும் கிறிஸ்துவின் ஏழை சகோதரர்களையும் நாம் அன்பு கூர்ந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று. திருஅவையை விமர்சிப்பது எளிதாகத் தெரியும் இன்றைய காலக்கட்டத்தில், திருஅவையை அன்புகூர்ந்து பாதுகாக்க வேண்டுமென்கின்ற இந்த அழைப்பு, நம்மிடம் சிலவற்றை எதிர்பார்க்கிறது.

கடவுளின் கருணையால், அருளான வகையில் மீட்கப்பட்ட பாவிகள் நாம் என்பதை வெளிப்படையாக ஏற்கவும், நம்மிடையே இருக்கும் உயிர்த்த கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கும், அருளடையாளங்களில் காணப்படும் இயேசுவின் அருள் கொண்டுள்ள புதுப்பிக்கும் வல்லமைக்கும், தூய ஆவியார் வழங்கும் தொடர் கொடையான புனிதத்துவத்திற்கும் சான்றுகளாக விளங்க நாம் எதிர்பார்க்கப்படுகிறோம். வரலாற்றில் நாம் காணும் அனைத்து புனிதர்களுடனும் இணைந்து நம்மையும், திருஅவையின் தேவைகளையும் புனித யோசேப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்து 'வாழ்வின் பாதையில்' நம்மை வழிநடத்தவும் அனைத்துத் தீமைகளிலிருந்து நம்மைக் காக்கவும், அவரிடம் வேண்டுவோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2022, 12:14

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >