தேடுதல்

மறைக்கல்வியுரை : நல்மரணத்தின் பாதுகாவலர் புனித யோசேப்பு

விசுவாசத்தில் நாம், மரணத்தை, வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கத் துவங்கும்போது, வாழ்வையும் நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த பல வாரங்களாக புனித யோசேப்பு குறித்த சிந்தனைகளை பல்வேறு தலைப்புக்களின்கீழ் புதன் மறைக்கல்வி உரைகளில் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், 'நல்மரணத்தின் பாதுகாவலர் புனித யோசேப்பு' என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். வத்திக்கான் புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் திருப்பயணிகள் குழுமியிருக்க, முதலில் மத்தேயு நற்செய்தி 24ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது...... தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (மத் 24:42, 45-47.)

பின்னர், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை இடம்பெற்றது.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, புனித யோசேப்பு குறித்த நம் மறைக்கல்வியுரையில் இன்று,  'நல்மரணத்தின் பாதுகாவலர் புனித யோசேப்பு' என்பது குறித்துக் காண்போம். புனித யோசேப்பின் மரணம், அன்னை மரியா, மற்றும் இயேசுவின் பிரசன்னத்தின் ஆறுதலுடன் இடம்பெற்றது என்பதை ஆழ்ந்து தியானிப்பதிலிருந்து பிறந்ததுதான் இந்த, நல்மரணத்தின் பாதுகாவலர், என்ற பக்தி முயற்சி. இன்று நாம் பெரும்பாலும் மரணம் குறித்து அஞ்சுகிறோம். ஆனால், உயிர்த்த இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் என்பது, நாம் மரணத்தைக் குறித்து அஞ்சவேண்டியத் தேவையில்லை என்பதை மட்டுமல்ல, கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் முழுநம்பிக்கைக் கொண்டு அந்த மரணத்தை ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் எதிர்பார்க்கிறது. விசுவாசத்தில் நாம், மரணத்தை, வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கத் துவங்கும்போது, வாழ்வையும் நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குவோம். நம் கல்லறைக்குள் நாம் எதையும் எடுத்துச்செல்லப் போவதில்லை என்ற நிலையில், நம்முடைய வாழ்வின் முக்கிய அக்கறைகளாக, விசுவாசம், நம்பிக்கை, மற்றும் பிறரன்பு இருக்க வேண்டும். மரணத்தறுவாயில் இருப்போருக்கான சிறப்பு அக்கறையை திருஅவை எப்போதும் காட்டி வந்துள்ளது.  அவர்களுடன் உறுதுணையாக இருந்து அவர்கள் மீது அக்கறை காட்டுவது, வாழ்வின் புனிதத்துவத்தை மதிப்பது, தீரா நோயுற்றோர் தற்கொலை புரிய உதவுவதையும் கருணைக்கொலையையயும் தீவிரமாக தடுப்பது, என பல்வேறு வழிகளில் மனித மாண்பை மதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. புனித யோசேப்பு, மற்றும் அன்னை மரியாவின் பரிந்துரைகள் வழியாக, நம் மரணம், இறைவனின் முடிவற்ற இரக்கத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட சந்திப்பாக இருப்பதாக. இதற்காகவும், மரணத்தறுவாயில் இருக்கும் அனைவருக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும்  மக்களுக்காகவும், நாமனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம்.

இவ்விண்ணப்பத்துடன் தன் மறைக்கல்வியுரையை நிறைவுச் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2022, 11:20

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >