தேடுதல்

அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள Rutilio Grande அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள Rutilio Grande  

அருளாளர்களாக அறிவிக்கப்படும் 2 துறவியரும் 2 பொதுநிலையினரும்

அருளாளர் பட்டம் பெறும் இயேசு சபை அருள்பணியாளர் Rutilio Grande, உண்மையையும் நீதியையும் வேண்டும் ஒரு நாட்டின் அடையாளாச் சின்னமாய் இருக்கிறார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த 1977ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, எல் சால்வதோர் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் உட்பட நான்குபேர் அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.

ஜனவரி 22, வரும் சனிக்கிழமையன்று, Rutilio Grande அவரோடு இணைந்து கொல்லப்பட்ட Manuel Solórzano, Nelson Rutilio Lemus ஆகிய மூவரும், மேலும், பிரான்சிஸ்கன் துறவி Cosma Spessotto அவர்களும் எல் சால்வதோர் நாட்டில் அருளாளர்களாக உயர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த 4 மறைசாட்சிகளின் மிக முக்கியமான பங்களிப்பு, நெருக்கடி மற்றும் வன்முறையின்போது ஏழைகளுக்கு ஆதரவாக நின்றதுதான்’ என்று கூறியுள்ள இயேசு சபை அருள்பணியாளர் ரோடால்ஃபோ கார்டனல் (Rodolfo Cardenal) அவர்கள், Rutilio Grande அவர்கள், ‘உண்மையையும் நீதியையும் வேண்டும் ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாய் இருக்கிறார்’ என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

1970 முதல் எல் சால்வதோர் மக்கள் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளால் நடத்தப்பட்டார்கள், அந்நாட்டிலுள்ள விவசாய சங்கங்களோடு சேர்ந்து மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர், இவர்களைத் தூண்டிவிடுவதே Rutilio Grande தான் என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அவரது வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கிறது.

மார்ச் 12, 1977 அன்று, மாலை ஐந்து மணியளவில், சான் சால்வதோரிலிருந்து  சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்கு, புனித யோசேப்பு திருவிழாவிற்கான இறுதி நாள் நவநாள் திருப்பலியை நிறைவேற்ற Rutilio Grande,  Manuel Solórzano, Nelson Rutilio Lemus ஆகியோருடன் எல் பைஸ்னல் (El Paisnal) என்ற இடத்திற்குத் தங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மூவரும் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

1980ல் தொடங்கி 1992ல் முடிவுக்கு வந்த எல் சால்வதோர் உள்நாட்டுப் போரில்,     20க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள், 4 அருள்சகோதரிகள், நூற்றுக்கணக்கான வேதியர்கள் மற்றும் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ உட்பட பலர் கொல்லப்பட்டனர் என்பதும் நினைவுகூரத்தக்கது 

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2022, 15:49