தேடுதல்

பிரேசில் வெள்ள பாதிப்பு பிரேசில் வெள்ள பாதிப்பு  

பிரேசில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை செபம்

திருத்தந்தை : வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், மற்றும், வீடுகளை இழந்தவர்களுக்காக செபித்தேன். நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவோருக்கு இறையாசீரை வேண்டுகிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

பிரேசில் நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜனவரி 16, ஞாயிறு மூவேளை செபவுரைக்குப்பின் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தன் நெருக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

கடந்த சில வாரங்களாக பிரேசில் நாட்டின் பலபகுதிகளில் பெய்துவரும் பெருமழையாலும், அதன் விளைவான வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்ட மக்களை தான் நினைவு கூர்வதாக உரைத்து, அவர்களுக்காக செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும், வீடுகளை இழந்தவர்களுக்காகத் தான் செபித்ததாகவும், நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவரும் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரு மாதங்களாக பிரேசில் நாட்டின் Bahia, மற்றும் Minas Gerais மாநிலங்களில் பல குறுநகர்களில் தொடர்ந்து பெய்துவந்த மழையால் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பல ஆயிரக்கணக்கானோர் உறைவிடங்களை இழந்துள்ளனர்.

நிலச்சரிவுகளும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் அதிகரித்துவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிறரன்பு அமைப்புக்களுடன் இணைந்து, தலத்திருஅவையும் பல்வேறுப் பணிகளை ஆற்றிவருகிறது.

பிரேசிலின் வெள்ளப்பெருக்கால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர், 93,000 பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2022, 15:02