பிறரன்பு பணிகளில் இறைவனுக்கும் தங்களுக்குள்ளும் நெருங்கி வருதல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஒப்புரவு, மற்றும், கடந்த கால எண்ணங்களின் குணப்படுத்தலை நோக்கிய நம் பாதையில், விடுதலையையும், உண்மைக்கான தேடலில் உறுதிப்பாட்டையும் இறைவன் வழங்குவாராக, என பின்லாந்திலிருந்த தன்னை சந்திக்க வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு ஒன்றிற்கு உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவைக் காண வந்த ஞானிகளை மேற்கோளாகக் கொண்டு இக்குழுவுக்கு உரையொன்று வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறந்திருக்கும் மெசியாவைக் காணவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டதால் அவர்களின் நோக்கத்தில் ஞானிகள் வெற்றியடைய முடிந்த அதேவேளையில், அவர்களின் இந்தப் பயணத்தைத் துவக்கி வைத்தவர், விண்மீன் வழியாக முதலில் தேடிச் சென்ற கடவுளே என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இயேசுவால் தொடப்பட்ட ஒவ்வொருவரும், ஒருநாளும் தங்களுக்காக வாழ்பவர்களாகச் செயல்படமுடியாது, மாறாக, எப்போதும் முன்னோக்கிச் செல்பவர்களாக, அதிலும் ஒன்றிணைந்து செல்பவர்களாகவே இருக்க முடியும் என கிறிஸ்தவ ஒன்றிப்பின் பாதை குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பாதையின் சில படிகள் எளிமையானதாகவும், சில கடினமானதாகவும் இருக்கக்கூடும் என்பதுக் குறித்து விரிவாக விளக்கினார்.
பிறரன்பு நடவடிக்கைகளில் கிறிஸ்தவ சபைகள் ஈடுபடும்போது, ஏழைகளில் பிரசன்னமாயிருக்கும் இறைவனுக்கு நெருக்கமாக அவர்கள் வருவது மட்டுமல்ல, கிறிஸ்தவ சபைகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வருகின்றன என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, இப்பாதையில் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுபவர்களாகவும், அவ்வப்போது நம் நோக்கம் குறித்து சிந்திப்பவர்களாகவும் செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
325ம் ஆண்டு நீசேயாவில் இடம்பெற்ற முதல் பொதுச்சங்கத்தின் 1700ம் ஆண்டு 2025ம் ஆண்டிலும், கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்க கூட்டப்பட்ட Augsburg கூட்டத்தின் 500ம் ஆண்டு 2030ல் சிறப்பிக்கப்பட உள்ளது குறித்தும், பின்லாந்திலிருந்து வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவிடம் நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்