தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை - புனித யோசேப்பின் தந்தைக்குரிய அன்பு

உவமையில் வரும் காணாமல்போன மகனைப்போல், நாமும், நம் தவறுகளையும் பாவங்களையும் ஏற்பதுடன், இறைவனின் அன்பு அரவணைப்பில் நாம் மாற்றியமைக்கப்பட அனுமதிப்போம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வாழ்வு குறித்து, கடந்த சில வாரங்களாக புதன் மறைக்கல்வி உரைகளில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி 19, இப்புதனன்று, புனித யோசேப்பின் தந்தைக்குரிய அன்பின் எடுத்துக்காட்டு எவ்வாறு இருந்தது என்பது குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகளையொட்டி, திருப்பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தவர்களாக, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் அமர்ந்திருக்க, புனித யோசேப்பு குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, புனித யோசேப்பு குறித்த மறைக்கல்வித் தொடரில் இன்று நாம், அவரின் தந்தைக்குரிய அன்பின் எடுத்துக்காட்டு குறித்தும், இயேசுவின் வாழ்வில் அதன் முக்கியத்துவம் குறித்தும் நோக்குவோம். நற்செய்திகளில், இயேசு வானகத்திலுள்ள தன் தந்தையின் அன்பு குறித்து பேசும்போதெல்லாம், குறிப்பிடத்தகும் விதத்தில், இவ்வுலகிலுள்ள தந்தையின் உருவத்தையே முன்னிறுத்திப் பேசுவதைக் காண்கிறோம். இதனை நாம் சிறப்பான விதத்தில், 'காணாமற்போன மகன்' உவமையில் (லூக் 15:11-32) காணலாம். இது பாவத்தையும் மன்னிப்பையும் குறித்து மட்டும் பேசவில்லை, மாறாக, முறிந்துபோன உறவைப் புதுப்பித்து மீட்கும் அன்பு குறித்தும் எடுத்துரைக்கிறது. காணாமல்போன மகனைப்போல், நாமும், நம் தவறுகளையும் பாவங்களையும் ஏற்பதுடன், இறைவனின் அன்பு அரவணைப்பில் நாம் மாற்றியமைக்கப்பட அனுமதிக்க வேண்டும். இறையருளின் வல்லமையின் துணையோடு, அவரின் விருப்பத்தை நாம் ஏற்று நடத்தும் பணி குறித்து இறைவன் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையில், அவரின் கனிவான அன்பை நம்மால் காணமுடிகிறது. இறை அருளின் வல்லமை, நம் பலவீனங்கள் வழியாகவும் செயல்படுகிறது. கிறிஸ்துவில் நாம் ஆன்மிக முதிர்ச்சியை அடைவதற்கு உதவும் வகையில், நம்மைக் குறித்த உண்மைகளை நாம் கண்டுகொள்ள ஓர் அன்புநிறைத் தந்தையாக கடவுள் நமக்கு உதவுகிறார். இதனால்தான், அருளடையாளங்களில், குறிப்பாக ஒப்புரவு என்னும் அருளடையாளத்தில் இறைவனின் இரக்கம்நிறை அன்பை எதிர்கொண்டு அனுபவிப்பது முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கின்றது. புனித யோசேப்பின் பரிந்துரை வழியாக நாம், இயேசுவைப் பின்பற்றவும்,  அனைத்தையும் உருமாற்றும் வல்லமையுடைய இயேசுவின் தெய்வீக அன்பிற்கு சான்றுகளாக விளங்கவும் கற்றுக்கொள்வோமாக. 

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது உலகில் சிறப்பிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்காக அனைவரும் இறைவேண்டல் செய்வோம் என்ற விண்ணப்பத்தை முன்வைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2022, 12:03

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >